NewsBlog

Wednesday, November 25, 2020

எச்சரிக்கை கூண்டு ஏற்றுவதன் பொருள் என்ன?

புயல் ஏற்படும் காலங்களில் துறைமுகங்கள், கடலோர பகுதி மக்கள், கப்பல்களை எச்சரிக்கும் வகையில் துறைமுகத்தில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும். அதில் புயலின் அபாய நிலையை உணர்த்தும் எண்கள் குறிப்பிடப்படும். இந்த பணியை வானிலை ஆய்வு மைய தரவுகள் அடிப்படையில் துறைமுக நிர்வாகம் மேற்கொள்ளும்.

சில நாடுகள் புயல் அபாய எச்சரிக்கையை வண்ண கொடிகள் மூலம் உணர்த்தும். இந்தியாவில் புயல் அபாய எச்சரிக்கை, எண்கள் மூலம் உணர்த்தப்படுகிறது.

1864ஆம் ஆண்டில் அப்போதைய கல்கத்தா (தற்போது கொல்கத்தா) மச்சிலிப்பட்டினம் இடையே பலத்த புயல் ஏற்பட்டு கடும் சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது முதல் புயல் எச்சரிக்கை கூண்டை ஏற்றும் வழக்கத்தை இந்திய துறைமுகங்கள் கடைப்பிடிக்கத் தொடங்கின. அந்த வகையில், புயல் அபாய எச்சரிக்கை கூண்டு முதன் முதலாக கொல்கத்தா துறைமுகத்தில் ஏற்றப்பட்டது.

இந்த வகை எச்சரிக்கை எண்கள் 11 வகைப்படும். அது பற்றிய எளிய விளக்கத்தை பார்க்கலாம்.

எண். 1 என்பது, தூர முன்னறிவிப்பை குறிக்கும். அது புயல் உருவாகக் கூடிய திடீர் காற்றோடுகூடிய மழையுள்ள வானிலைப் பகுதியை குறிக்கிறது. இது கடலில் குறைந்த காற்றழுத்தம் ஏற்படுவதையும், மணிக்கு சுமார் 60 கி.மீ வேகத்தில் புயல் வருவதையும் குறிக்கும். ஆனால், இது காற்றின் வேகம் பற்றிய எச்சரிக்கையாக மட்டுமே கருதப்படும். கரைக்கு ஆபத்தில்லை.

எண். 2 என்பது தூர எச்சரிக்கையை குறிக்கும். புயல் உருவாகியுள்ளதை குறிக்க இந்த எண் பயன்படுத்தப்படுகிறது. இது கடலில் ஏற்படும் அழுத்தம் மற்றும் மணிக்கு சுமார் 60 முதல் 90 கி.மீ வேகத்தில் வீசும் காற்றை குறிக்கும். இந்த நேரத்தில் துறைமுகத்தை விட்டு கப்பல்கள் புறப்பட அனுமதிக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

எண் 3 என்பது உள்ளூர் முன்னறிவிப்பாகும். திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்படுவதை இது குறிக்கிறது. இது கடலில் அழுத்தம் உருவாகி துறைமுகத்துக்கும் ஆபத்தை தோற்றுவிக்கலாம். கரையை நோக்கி மணிக்கு சுமார் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம் என்ற எச்சரிக்கையை இது உணர்த்தும்.

எண் 4 என்பது உள்ளூர் எச்சரிக்கை. இது துறைமுகம் புயலால் அச்சுறுத்தப்படலாம். ஆனால், அது மிகவும் அதிகமான முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டிய அளவுக்கு தீங்கை விளைவிக்கும் என்று தோன்றவில்லை என்பதை குறிக்கிறது. கடலில் ஏற்படும் ஆழமான அழுத்தத்தால் துறைமுகத்துக்கு பிந்தைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியத்தை எச்சரிப்பதாக இது அமையும். மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி காற்று வீசும் என்பதால் இது துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய எச்சரிக்கையாக அமையும்.

எண். 5 என்பது அபாய நிலையை குறிக்கிறது. துறைமுகத்தின் இடது பக்கமாகப் புய.ல் கரையைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதை குறிக்கிறது. இது கடலில் ஏற்பட்ட ஆழமான அழுத்தம், புயலாக உருப்பெற்று கரையை கடப்பதை குறிக்கும். இந்த நேரத்தில் மணிக்கு சுமார் 60 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.

எண் 6 என்பது அபாய நிலையை குறிக்கிறது. துறைமுகத்தின் வலது பக்கமாக புயல் கரையை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதை குறிக்கிறது. எண் 5 போலவே இது தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இது துறைமுகத்தின் வலப்பக்கத்தில் நிகழும்.

எண் 7 என்பது அபாய நிலையை குறிக்கிறது. இது துறைமுகத்தை நெருங்குகிற அல்லது இதற்கு அருகே கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படும் புயலால் கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படும் என்பதை குறிக்கிறது. இது புயல் கரையை கடப்பதையோ துறைமுகத்துக்கு அருகே கடப்பதையோ குறிக்கும். மொத்தத்தில் எண் 5,67 ஆகியவை துறைமுகங்களுக்கு ஏற்படும் ஆபத்தை உணர்த்தும் எச்சரிக்கையாகும்.

எண் 8 என்பது பெரிய அபாயத்தை குறிக்கிறது. துறைமுகத்தின் இடதுபக்கமாக கரையை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் கடும் புயலால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும். புயல் கரையை கடக்கும்போது தரைப்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 120 கி.மீ வேகம் வரை இருக்கும். எனவே இதை மிக ஆபத்தானதாக கருத வேண்டும்.

எண் 9 என்பது பெரிய அபாயம். இது துறைமுகத்தின் வலது புறமாக கரையை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் கடும் புயலால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும். இது புயல் கடுமையான நிலையில் இருந்து மிகக் கடுமையான நிலைக்கு செல்வதை குறிக்கும் என்பதால் இதுவும் மிக, மிக ஆபத்தானது.

எண் 10 என்பது பெரிய அபாயம். இத்துறைமுகத்தை அல்லது அதன் அருகே கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் கடும் புயலால் ஏற்படும் கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படும். இது மிகவும் கடுமையான புயலாக துறைமுகத்தை கடந்தோ அதன் அருகேயே கடக்கலாம் என்பதை உணர்த்தும். இந்த நேரத்தில் மணிக்கு சுமார் 220 கி.மீட்டருக்குமான வேகத்தில் சூறைக்காற்று வீசும்.

எண் 11 என்பது தகவல் தொடர்பற்ற நிலையை குறிப்பது. இது வானிலை எச்சரிக்கை மையத்தோடு தகவல் தொடர்பற்றுப் போன நிலையில் மோசமான வானிலையால் கேடு விளையலாம் என உள்ளூர் அலுவலர் கருதுவதை குறிக்கிறது. இதுதான் இருக்கும் ஆபத்துகளை எல்லாம் விஞ்சக்கூடிய பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நிலையாகும்.

தற்போது அதி தீவிர புயலின் மிக அதிக ஆபத்தை உணர்த்தும் எச்சரிக்கை எண் 10-ஐ குறிக்கும் சமிக்ஞை புதுச்சேரி துறைமுக பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் முதல் இரண்டு புயல் கவலை தரக்கூடியதாக இருக்காது. வேறு எங்கோ தொலைதூரத்தில் புயல் ஏற்பட்டிருப்பதை அவை குறிக்கும்.

3,4 ஆகியவை உள்ளூரில் நிலவும் மோசமான வானிலை கணிப்பை குறிக்கும்.

5,6,7 ஆகியவை அபாய நிலையை குறிப்பதாகும். துறைமுகத்தின் எந்த பகுதியிலும் புயல் கடந்து போவதை இது உணர்த்தும்.

8,9,10 ஆகியவை மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் தன்மையுடன் புயல்சீற்றம் இருப்பதை உணர்த்தும்.

இதில் புயல் அதி தீவிர நிலையாக மாறும்போது 8ஆம் எண் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணை குறிக்கும் கூண்டு ஏற்றப்படும்.

உச்சகட்டமான ஆபத்தை குறிப்பதுதான் 11ஆம் எண் கூண்டு. இதுதான் மிக, மிக கவலை தரக்கூடிய பேரழிவை ஏற்படுத்தும் புயல் சீற்றத்தை குறிக்கிறது.



0 comments:

Post a Comment