NewsBlog

Friday, May 17, 2013

சிறப்புக் கட்டுரை:‘அறிவை அரியணையிலேற்றி..!’


கஅபாவின் சுவர்களை எழுப்பிக் கொண்டிருந்த அந்த நேரம். ‘இறைவனின் தோழர் – கலீலுல்லாஹ்’ இப்ராஹீம் நபியும் அவரது அருமை மகனார் தியாகச் செம்மல் இஸ்மாயீல் நபியும் (இருவர் மீதும் இறையருள் பொழிவதாக!) இருகரமேந்தி இறைவனிடம் பிரார்த்தித்த அந்த தருணம். தொலைநோக்கு பார்வையுடன் அறிவார்ந்த ஒரு சமுதாயத்துக்கு அடித்தளமிட்டு பிறக்கிறது அந்தப் பிரார்த்தனை. அந்தகார இருட்டை விரட்டியடிக்க அறிவொளி கதிரொளி பாரெங்கும் பரவ மனிதகுலம் முழுமையும் மீட்சியடைய அடிமனதிலிருந்து எழுகிறது ஓர் இறைஞ்சுதல். வழிகாட்ட ஒரு தூதரை வேண்டி.. இறை சட்டங்களை ஓதிக்காட்ட… வேதத்தையும், ஞானத்தையும் அவர்களுக்குக் கற்றுத்தர, மாந்தர்தம் வாழ்வை தூய்மைப்படுத்த உதிர்கிறது அடிமனத்துநாதம்:

“எங்கள் இறைவனே! மேலும், இம்மக்களுக்காக அவர்களிலிருந்தே ஒரு தூதரை எழுப்புவாயாக! அவர் உன்னுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காட்டுபராகவும், வேதத்தையும் – ஞானத்தையும் கற்றுத் தரருபவராகவும், மேலும், அவர்களை (அவர்களுடைய வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துபவராகவும் திகழ வேண்டும்” (திருக்குர்ஆன் - 2:129)

கருணையே உருவான இறைவன் இறைஞ்சுதலை ஏற்கிறான். அண்ணல் நபி (ஸல்) அவர்களை தூதராக தேர்ந்தெடுத்து வான்மறையை அருள்கின்றான். இஸ்லாம் என்னும் இறைநெறியை உலகெங்கும் பரவச் செய்கிறான். வெறும் 23 ஆண்டு காலத்துக்குள் அரபு நாடு முழுவதும் அறியாமை காரிருள் விலகி, அறிவொளி தீபம் சுடர்விட்டு பிரகாசிக்கிறது. நபிகளாரின் இறுதி ஹஜ்ஜு காலத்தில் அரஃபா மைதானம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான உத்தம நபித்தோழர் – தோழியர்களால் நிரம்பி வழிகிறது.

அறிவுக்கான உவமையாக தாவூத் நபி, “இருள்படர்ந்த வீட்டில் ஏற்றப்பட்ட விளக்கு!” – என்கிறார்கள்.

ஈஸா நபியோ, தமது தோழர்களான ஹவாரியீன்களிடம் உரையாற்றும் போது, இப்படி கூறுகிறார்கள்:

“எனதருமை தோழர்களே! நான் உங்களுக்கு அறிவும் – விவேகமும் கலந்த அறிவுரைகள் சொல்வது, கேட்டு வியப்படைய அல்ல செயல்படவே சொல்கிறேன்!”

சூடானைச் சேர்ந்த இறையடியார் ஹகீம் லுக்மானிடம் யாரோ கேட்டார்கள்:

“உலகில் எல்லோரையும்விட பெரிய செல்வந்தன் யார்?”

“எல்லா நிலைகளிலும் தன்னிடம் உள்ளவற்றைக் கொண்டு திருப்தி அடைபவன்; பேராசையும் – பொருளாசையும் இல்லாதவன்” – அறிஞர் பதிலளித்தார்.

மீண்டும் கேட்கப்பட்டது:

"உலகில் எல்லோரையும்விட பெரிய அறிஞர் யாரய்யா?”

“தன் அறிவை மேலும், மேலும் வளர்த்தவாறே உள்ளவர்!”

அறிவை முதன்மைப்படுத்தும் சமூகங்களும், அறிவுபூர்வமாக சிந்திக்கும் இனங்களும், அறிவை நேசித்து செயல்படும் மனித குழுக்களும் வெற்றிப் பெறும் என்பதே வரலாறு.
இறைத்தூதர் முஹம்மது நபிகளாரும் (ஸல்) அறிவின் மீது தீராத அன்பு கொண்டிருந்தார்கள்.

ஒருமுறை நபிகளார் மஸ்ஜிதுன் நபவியில் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களது திருமேனியில் செந்நிறப் போர்வை போர்த்தப்பட்டிருந்தது. அங்கு நபித் தோழர் ஸஃப்வான் இப்னு ஆலி வந்தார். தங்களை அறிமுகம் செய்து கொண்டார்.

“இறைவனின் தூதரே! நான் முராத் கோத்திரத்தைச் சேர்ந்தவன். கல்வி கற்பதற்காக வீட்டைவிட்டு தங்களிடம் வந்துள்ளேன்!”

இதைக் கேட்டதும் நபிகளார் மகிழ்ச்சியடைகிறார்கள். எழுந்து நெஞ்சுடன் அணைத்து வரவேற்கிறார்கள். தமது தோழருக்காக இறைவனிடம் பிரார்த்தித்துவிட்டு சொல்கிறார்கள்:

“கல்வியைத் தேடி எந்த நபர் வீட்டைத் துறந்து வெளியேறுகிறாரோ, அவரை அருள்புரியும் வானவர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். எல்லா பக்கமும் சூழ்ந்து தங்கள் இறக்கைகளால் அணைத்துக் கொள்கிறார்கள். கல்வியின் மீதுள்ள அளவற்ற அன்பால் தங்களை மறந்தவர்களாய்  கீழ்வானம்வரை வந்துவிடுகிறார்கள்!”

இன்னொரு முறை நபிகளார் நவில்கிறார்கள்:

“எந்த நபர் கல்வியைத் தேடி பயணப்பட்டாரோ அவர் இறைவனின் பாதையில் உள்ளவராவார்; திரும்பும்வரை இந்நிலை நீடிக்கும்!”

கல்வியைத் தேடும் நிலையிலேயே ஒருவர் மரணித்துவிட்டால்…

“அவர் இறைவனை சந்திக்கும்போது, அவருக்கும்.. நபிமார்களுக்கும் நபித்துவம் என்ற அந்தஸ்து மட்டுமே இடையில் இருக்கும்!” – என்கிறார்கள் நபிகளார்.

“நபி (ஸல்) என்னை மார்புடன் அணைத்தக் கொண்டு, “இறைவா! இவருக்கு ஞானம் வழங்குவாயாக!” – என்று பிரார்த்தித்தார்கள்!” – என்று நபித்தோழர் இப்னு அப்பாஸ் (இறையருள் பொழிவதாக!) கூறுகிறார்கள்.

கொடை என்பதும், தான – தர்மங்கள் என்பதும் பொருளோ, செல்வமோ, வீடோ அல்லது நிலமோ இவற்றைத்தான் குறிக்கின்றன. ஆனால், நபிகளாரோ சமுதாயத்தின் மகுடமான கல்வியைக் குறிப்பது அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவது:

“ஒரு முஸ்லிம் கல்வியைக் கற்று அதை தன் முஸ்லிம் சகோதரருக்கு கற்குக் கொடுப்பதே தானங்களில் மிகச் சிறந்த தானமாகும்!”

வணக்கமா, கல்வியா, என்ற நிலையில் எது முக்கியத்துவம் பெறும்? இதோ அதற்கான பதிலாய் ஒரு வரலாற்று நிகழ்வு:

ஒருநாள். நபிகளார் மஸ்ஜிதுன் நபவியில் நுழைகிறார்கள். அங்கு இரு குழுவினர் இருப்பதைக் காண்கிறார்கள். முதல் குழுவினரோ ‘திக்ர், தஸ்பீஹ்’ போன்றவற்றில் அதாவது இறை தியானத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அடுத்த குழுவினரோ இஸ்லாமிய அறிவைக் கற்பதும் – கற்பிப்பதுமாய் இருந்தார்கள். 

“இரண்டு குழுவினரும் நற்செயல்களில்தான் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால், இவற்றில் ஒன்று மற்றதைவிட சிறந்தது.

முதல் குழு இறைவனை நினைவனை நினைவுகூர்ந்து பாவமன்னிப்பு கேட்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. இறைவன் இவர்களின் கோரிக்கையை ஏற்கலாம்; ஏற்காமலும் போகலாம்.

இரண்டாவது குழுவினரோ அறிவைப் பெறுவதும், பெற்ற அறிவை அடுத்தவர்க்கு சேர்ப்பதுமாய் (கற்பதும், கற்பிப்பதுமாய்) உள்ளனர்.

நான் ஆசிரியராகவே – ‘முஅல்லிம்’ அனுப்பப்பட்டுள்ளேன்!” – என்றவாறு இரண்டாம் குழுவினரோடு சேர்ந்து அமர்ந்து கொண்டார்கள்.

கல்விக்காக முன்னோர்கள் செய்த அர்ப்பணங்களால் அந்தச் சமூகம் உலகின் திசை எட்டும் பரவ காரணமானது. இதில் வறுமை ஒரு பொருட்டே அல்ல. உயரிய எண்ணமும் அதற்கான அர்ப்பணமும் அறிவொளி பரவ காரணமானது என்பதற்கு திண்ணைத் தோழர்களே உதாரணம்.

மஸ்ஜிதுன் நபவி எதிரே ஒரு பெரிய திண்ணை இருந்தது. அதில் கல்வியின் மீது தீராத அன்பு கொண்ட ஒரு குழுவினர் தமது இருப்பிடமாக்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வீடோ, வாசலோ, சொத்து – சுகங்களோ எதுவுமில்லை. கற்பதும், கற்பிப்பதும் அவர்களின் முக்கியப் பணி. கிடைப்பதை உண்டு.. தங்களுக்கு என்று எந்த விருப்பமும் இல்லாமல் இரவு – பகல் எந்த நேரமும் அறிவொளியை பரப்பி வந்த உத்தமார்கள் ‘அஸ்ஹாபே சுப்பா’ என்ற திண்ணைத் தோழர்கள். இவர்களில் புகழ் மிக்கவர் அபூஹீரைரா (இறையருள் பொழிவதாக!). அவர்களின் வறுமை நிலைக்கு கீழ்க்கண்ட இந்தச் சம்பவமே எடுத்துக் காட்டு:

ஒருநாள் நடந்ததை நபித்தோழர் அபூ ஸய்யீத் அன்சாரி (இறையருள் பொழிவதாக!) விவரிக்கிறார்கள்:

“சரியான குளிர்காலமது. உடலை உறையச் செய்யும் குளிர். போர்த்திக் கொள்ள ஆடையில்லாமல் திண்ணைத் தோழர்கள் தவித்தார்கள். நெருங்கி அமர்ந்து உடல் வெப்பத்தையே கதகதப்பாக்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் திருக்குர்ஆன் ஓத மற்றவர்கள் கவனமாக கேட்டவாறு இருந்தார்கள். அங்கு நபி (ஸல்) வந்தார்கள். அச்செயலுக்காக இறைவனைப் புகழ்ந்தார்கள். அக்கூட்டத்தில் அமர்ந்து கொண்டார்கள்.

“யாரொருவர் இம்மையில் தனது சகோதரனின் ஒரு குறையை மறைக்கிறாரோ, மறுமையில் இறைவனும் அவரது குறையை மறைத்து விடுகின்றான்!”

இந்த சின்னஞ்சிறு நபிமொழிக்காக மதீனாவிலிருந்து எகிப்துவரை வாகன வசதி இல்லாத அந்தக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது நினைக்கவே பிரமிப்பூட்டும். நம் மூதாதையரின் தியாகங்களை எண்ணி கண்கள் குளமாகும். இப்படி பயணம் மேற்கொண்டவர் நபித்தோழர் அபூஅய்யூப் அன்சாரி நபித்தோழர் அகபாவிடம் (இவர்கள் இருவர் மீதும் இறையருள் பொழிவதாக!) மேற்கண்ட நபிமொழியை கேட்பதற்காகவே பயணம் மேற்கொண்டவர்.

கல்வியாளர்கள் குறித்து திருக்குர்ஆன் கூறுகிறது:

“அறிந்தோரும், அறியாதோரும் சமமாக இருக்க முடியுமா?” (39:9)

“உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டுள்ளார்களோ, மேலும், எவர்களுக்கு ஞானம் வழங்கப்படுகின்றதோ அவர்களுக்கு இறைவன் உயர்ந்த பதவிகளை வழங்குவான்” ( 58:11)

“உண்மையில், இறைவனின் அடிமைகளில் ஞானமுடையோர் மட்டுமே அவனுக்கு அதிகமாக அஞ்சுகிறார்கள்”

ஞானத்தை வேண்டி கேட்கும்படி திருக்குர்ஆன் ஊக்குவிக்கிறது இப்படி:

“என் இறைவனே! எனக்கு அதிகமாக ஞானத்தை வழகுவாயாக!” (20:114)

இஸ்லாம் என்பது அறிவுக்குப் பெயர்.

அறிவு பெறாமல் எதையும் செயலுருவம் ஆக்க முடியாது.

சடங்கு சம்பிரதாயங்கள், மந்திர – தந்திரங்கள், உணவு – பழக்க வழக்கங்கள், ஆடை – அணிகலன்கள், புறத்தோற்றங்கள், மூடப்பழக்க வழக்கங்கள் இஸ்லாம் அல்ல. மேலும், இஸ்லாம் என்பது பெற்றோரிடமிருந்து வழிவழியாக வரும் மூதாதையர் வாரிசும் அல்ல.

இஸ்லாம் என்பது இறைநெறி. வாழ்க்கை. அது ஒரு அறிவு சார் கொள்கை. திருக்குர்ஆன் மற்றும் திருநபிமொழிகளின் ராஜபாட்டை. அமல்களின் – செயல்களின் தொகுப்பு. நன்மை – தீமைகளை பகுத்தறியும் வழிமுறை. ஏவல் – விலக்கல்களின் அறிவு. அறிவார்ந்த செயல்முறை.

ஆக, அறிவார்ந்த செயல்முறை, ஆரோக்கியமான அறிவும், திடமான ஞானமும் நிறைந்தவர்களின் இதயங்களில்தான் காலத்துக்கும் இஸ்லாம் நிலைத்து நிற்கும்.

“இது மனிதகுலம் முழுமைக்கும் உரிய தூதுச் செய்தியாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்பட வேண்டும். மேலும், உண்மையில் இறைவன் ஒருவனே என்பதை அவர்கள் அறிந்திட வேண்டும். மேலும், அறிவுடையோர் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காகவே (இந்தச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது!)” (14:15)

கல்வி அறிவை அலட்சியப்படுத்தி, கற்றோரின் நல்லுரைகளை புறக்கணித்ததால்… வந்த விளைவை நரசவாசிகள் இப்படி புலம்புவதாக திருக்குர்ஆன் கூறுகிறது:

“அந்தோ! நாங்கள் செவித்தாழ்த்தி கேட்பவர்களாய் அல்லது புரிந்து கொள்பவர்களாய் இருந்திருந்தால்.. (இன்று) நாங்கள் கொழுந்து விட்டெரியும் இந்த நெருப்பில் தண்டனைக்குரியவர்களோடு சேர்ந்திருக்க மாட்டோமே!” (327:10,11)

திருக்குர்ஆன் அறிவீலிகளின் உவமை ஒன்றையும் இப்படி காட்டுகிறது:

“இறைநெறியைப் பின்பற்ற மறுப்பவர்களின் உவமையானது கால்நடைகளைப் போன்றதாகும். சப்தமிடும் இடையனின் கூப்பாட்டையும், அழைப்பொலியையும் தவிர வேறு எதையும் கேட்பதில்லை. அவர்கள் செவிடர்களாய்.. ஊமையராய்.. குருடர்களாய் இருக்கிறார்கள். எனவே, எதனையும் அவர்கள் அறியமாட்டார்கள்” (2:171)

இஸ்லாத்தில் முதல் அந்தஸ்து பெரும் வணக்கம் தொழுகை.

தொழுகைக்கான அழைப்பு ‘பாங்கு’ இது மனித அறிவைத் தட்டி எழுப்பும் அறிவார்ந்த ரீதியான ஒரு செயல். “இறைவன் மகா பெரியவன்!” – என்ற உண்மையை உணர்த்தும் அறைகூவல்; “பரம்பொருள் ஒன்று!” – என்று உரத்து ஒலிக்கும் மகா முழக்கம். வெற்றியின் பக்கம் மனித இனத்தை அழைக்கும் சங்கநாதம். மாறாக, இது காற்றில் ஏற்ற – இறக்கத்துடன் வெறுமனே ஒலித்து ஓயும் ஒலி அலைகள் அல்ல.

இதேபோல, தொழுகைக்கான ஒவ்வொரு அசைவும் அறிவைச் சார்ந்தவையே!

இதேபோன்றவைதான் நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ் போன்ற இறைவணக்கங்களும். அறிவு பெறாமல் இவை எதுவொன்றையும் செயல்படுத்திட முடியவே முடியாது!

வான்மறையில் அருளப்பட்ட முதல் இறைவசனம்கூட, “ஓதுவீராக!” (96:1) என்பதுதான்.

உலக அறிவு, மார்க்க அறிவு என்று அறிவை கூறு போடாமல் நன்மைக்கான அறிவு எதுவானாலும் திரட்டிட வேண்டும் என்பதே திருக்குர்ஆனின் உள்ளடக்கம்.

புனிதமறை உலகைக்குறித்து ஏராளமான வசனங்களை எடுத்துரைக்கிறது.

“அறிவு முஸ்லிம்களின் காணாமல் போன சொத்து!” – என்கிறார்கள் நபி பெருமானார். (ஆதாரம்: திர்மிதி)

அறிவை ஈட்டுவதும், அதைப் பரப்புவதும், அதன் அடிப்படையில் உயிர்த்துடிப்புள்ள சமூகம் அமைப்பதும் வெற்றிக்கான ஒரே வழி. அதுவே அனைத்துப் பிரச்னைகளுக்கான தீர்வு.




0 comments:

Post a Comment