NewsBlog

Saturday, January 19, 2013

'கிட்மோ' - அமெரிக்காவின் சட்டரீதியான பூலோக நரகம்!



ஜனவரி 11, சிறப்புக்குரிய வெள்ளிக்கிழமை! அவர்கள் பிழைத்திருந்தால் அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்! திகில்.. திகிலாக திகில் படங்களின் உண்மைச்சம்பவங்கள் அடுக்கடுக்காய் அரங்கேறி தொடர் கதையான நாள்! 

மனித உரிமைகள் மறுக்கப்பட்டு..  உலகில் வாழவே தகுதியற்றவர்கள் என்று முத்திரைக் குத்தப்பட்டு...  அவர்களுக்கு ஊர் - பேர் இருந்தும், மனைவி.. மக்கள் .. உற்றார் உறவுகள் இருந்தும்.. அவர்கள் எவ்வித அடையாளமும் அற்ற அற்ப ஜீவிகள் என்று ஏகாத்திபத்தியத்தின் சட்ட ரீதியான அங்கீகாரம் பெற்றவர்கள். 

கிட்மோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் குவாண்டனமோ சிறைக் கொட்டடிகளில் அடைப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் இவர்கள். 

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்க சர்வாதிகார ஜனநாயக அமைப்பால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் .. சிறார்கள்.. அப்பாவிகள் கைது செய்யப்பட்டு ஜனவரி 11 ஆம் நாளோடு, 11 ஆண்டுகள் ஆகின்றன! அதாவது 21 - ஆம் நூற்றாண்டில் வாழும் மனித இனம் இதுவரையும் கேள்விப்படாத சித்திரவதைகளும், கொடுமைகளும், அவமதிப்புகளும் அனுதினமும் கிட்டோவில் இஸ்லாத்தின் பெயரால் அனுபவித்து வரும் அப்பாவிகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு வயது 11. இதில் மற்றுமோர் கொடுமை என்னவென்றால்.. இவர்களில் பெரும்பான்மையினர் மீது இதுவரையிலும் எவ்வித குற்றமும் சுமத்தப்படவில்லை என்பதாகும்!

11 ஆண்டுகள் கழிந்த பின்னும் குற்றமும் சுமத்தப்படாத போது விடுதலை செய்துவிட வேண்டியதுதானே? 



ஆனால், உலகம் முழுக்க ஜனநாயகம், மனித உரிமைகள் என்று வாய்க் கிழியப் பேசும் ஒபாமாவும், அவரது ஜனநாயக சர்வாதிகார ராஜாங்கமும் கைதிகளுக்கான அடிப்படை உரிமைகளையும் தர மறுக்கின்றன.  சட்ட ரீதியான மனித உரிமை மீறல்களில் இந்த கைதிகள் சோதனைக்கூடத்தின் பரிசோதனை எலிகளைப் போல அறிவியல் ரீதியான.. உளவியல் ரீதியான தொடர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். ஹிட்லர், முசோலினி போன்ற கொடுங்கோலர்கள் ஒருவேளை உயிரோடு இருந்தால்.. இந்த ஜனநாயக சர்வாதிகாரிகளான ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் பராக் ஒபாமாக்களின் கொடுமைகளைக் கண்டு தாங்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று பெருமைப்பட்டிருப்பார்கள்!  

உலகின் தலைச்சிறந்த புலனாய்வு பத்திரிகையாளரும், புத்தக ஆசிரியர், புகைப்படம் மற்றும் திரைப்பட கலைஞரும், குவாண்டானாமோ சிறைக் கொடுமைகள் பற்றிய ஆய்வறிஞருமான 'ஆண்டி வொர்த்திங்டன்' தமது http://www.andyworthington.co.uk/ வலைத்தளத்தில் இப்படி பதிவு செய்கிறார்:


 "பணத்தாசைப் பிடித்த ஆப்கன் மற்றும் பாகிஸ்தானிய கூட்டாளிகளால் அமெரிக்க ராணுவத்துக்கு, "அதிபயங்கரத்திலும் அதிபயங்கரமானவர்கள்!" என்று பெயரிடப்பட்டு கொழுத்த விலைக்கு விற்கப்பட்ட சிறுவர் மற்றும் இளைஞர்கள் இவர்கள்! 



அமெரிக்க எஜமானனை மகிழ்வூட்ட அல்லது அமெரிக்க எஜமானனின் அழுத்தம் தாளாமல் தப்பும் தவறுமாய் கேள்விப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 17 ஆம் நூற்றாண்டின் சூனியக்காரி கிழவியைப் போல விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டு கைது செய்யப்பட்ட அப்பாவிகள் இவர்கள்.

மனித இனம்  சகிக்க முடியாத அளவிலான சித்திரவதைகள் தாளமுடியாமல் துரதிஷ்டசாலிகளான இவர்களில் மூவர் மரணமடைந்ததை ஒபமாவின் நிர்வாகம் தற்கொலைகள் என்ற வார்த்தை ஜாலங்களோடு கதைகளை முடித்துவிட்டது. 

இந்த மூவரில் ஒருவர் யெமனைச் சேர்ந்த அத்னான் பர்ஹான் அப்துல் லதீப். மனநிலை பாதிக்கப்பட்டவரான இவர் மீது எந்த குற்றமும் இல்லை. விடுதலைக்கான எல்லா தகுதிகளோடும் பலமுறை விடுதலைக்காக பரிந்துரைக்கப்பட்டவர். ஆனால், மனித உரிமைகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் ஒபாமா நிர்வாகமோ அவரது மரணம் வரை அந்த அப்பாவியின் விடுதலையை மறுத்தே வந்தது. 

ஒரு அத்னான் மட்டுமல்ல சிறைப்பட்டிருக்கும் 166 பேரில் 86 பேர் விடுதலைக்கான முழு தகுதியும் மூன்றாண்டுகளுக்கு முன்பே பெற்றிருந்தார்கள். அதுவும் ஒபாமாவால் நியமிக்கப்பட்ட குவாண்டானாமோ சிறைக் கைதிகளுக்கான சிறப்பு விசாரணைக் குழு சமர்பித்த அறிக்கை இது. 

இதற்கு முன்னர், அதிகாரப் பூர்வமாக 2004-2007 இடைப்பட்ட காலத்தில் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைக் குழுவின் அறிக்கையும் சிறைப் பிடிக்கப்பட்ட கைதிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அப்பாவிகள் என்று அறிக்கையும் சமர்பித்திருந்தது. கிறுக்குப் பிடித்த அமெரிக்க ஜனநாயக சர்வாதிகாரிகளின் இந்த பிடிவாத மனோநிலையை என்னவென்பது?

இதில் ஒரு அதிஷ்டசாலி 'சமி அல் ஹஜ்', அல் ஜஸீராவின் கேமரா மேன். குவாண்டானோ சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர். டிசம்பர் 2001-இல், ஆப்கானிஸ்தானுக்கு செய்தி திரட்ட செல்லும் போது, பாகிஸ்தானில் இவர் சிறைப்படுத்தப்பட்டார். 

 எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லாமல் சிறைப்படுத்தப்பட்ட 'அல் ஹஜ்' தொடர் சித்திரவதைகளுக்கு ஆளானார். காவல் நாய்களால் கடிக்க வைக்கப்பட்டார்.  உத்திரத்தில் கட்டி தொங்க விடப்பட்டார். காவலர்கள் இவரைத் தொடர்ந்து தூங்க விடவில்லை. அல் காயிதாவின் நிறுவனம்தான் அல் ஜஸீரா என்று வாக்குமூலம் தரும்படி நூற்றுக்கும் அதிகமான தடவை விசாரணை காவலர்களால் வற்புறுத்தப்பட்டார். இப்படி ஆறு ஆண்டுகள் சித்திரவதைகள் தொடர்ந்தன. கடைசியில், ஜனவரி 2007-இல், அவர் தொடர் உண்ணாவிரதம் இருந்ததன் விளைவாக அதாவது 438 நாள் உண்ணாவிரதம் இருந்ததன் விளைவாக மே 2008 இல், அவர் விடுதலை செய்யப்பட்டார். 

சர்வதேச, தேசீய ஊடகத்துறையினர் இவரின் விடுதலைக்காக எந்தவிதமான குறிப்பிடத்தக்க ஒரு போராட்டமும் நடத்தவில்ல என்பது வருந்தத்தக்கது.

சமீபத்தில் அல் ஜஸீராவின் அல் ஹஜ் தானும் தம்மோடு சிறைப்பட்டிருந்த சக கைதிகளும் அனுபவதித்த சிறைக் கொடுமைகளை Democracy Now இணையதளத்தின், 'அமி குட்மேன்னோடு' பகிர்ந்து கொண்டார். (http://www.democracynow.org/2013/1/8/exclusive_as_gitmo_turns_11_al )  அப்போது அவர் குவாண்டானாமோ சிறைக் கொட்டடிகளில் திருக்குர்ஆன் பிரதிகள் கழிவறைக் காகிதங்களாக அமெரிக்க காவலர்களால் பயன்படுத்தப்பட்டதையும், திருக்குர்ஆன் பிரதிகளை அந்த கொடுங்கோலர்கள் கால்களால் மிதித்ததையும் குறிப்பிட்டது முக்கியமானது.

 
நான்காண்டுகளுக்கு முன்னர் ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, குவாண்டானாமோ சிறைக் கொட்டடிகளை மூடிவிடுவதாக உறுதியளித்திருந்தார். ஆனால், இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது அந்த சபதத்தை அவர் உதாசீனப்படுத்தினார். ஆக குவாண்டானாமோ சிறைக்கொட்டடி திறக்கப்பட்டு 11 ஆண்டுகளாக தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்பட்டுவருகின்றன.

அரசியலமைப்பு உரிமைகளுக்கான மையத்தின் சட்ட இயக்குனர் 'பஹர் அஜ்மி',  "ஒபாமா நிர்வாத்தின் கீழ் அண்மைக் காலமாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அதிகளவில் கொல்லப்படுவதை"- வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். "தனிப்பட்ட குற்றங்கள் சுமத்தப்பட்ட அப்பாவிகள் விஷயத்திலும் ஒபாமா நிர்வாகம் அலட்சியமாக இருப்பதன் விளைவு இது" என்கிறார்.

ஒபாமாவின் அரசியல் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு வியப்பொன்றும் ஏற்படாது. ஏனெனில், பயங்கரவாதத்துக்கு பதிலடிக்கான குழுவின் ஆலோசகர் ஜான் பெர்னான் சிஐஏ உளவுத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் குவாண்டானாமோ சிறைக் கைதிகளை விசாரணை செய்ய கடைப்பிடிக்கப்பட்டுவரும் சித்திரவதைகளை 'நவீன யுத்திகள்' என்று வர்ணித்ததை உலகம் இன்னும் மறந்திருக்காது. இவர் இராக் மீது அமெரிக்கா அக்கிரமப் போர் தொடுக்க முக்கிய காரணமாக இருந்தவர் என்பதும் முக்கியமானது. 



இத்தகைய மூர்க்கத்தனமான சிஐஏ உளவுத்துறை அதிகாரிகள் தலைமைப் பொறுப்பில் இருக்கும்வரை குவண்டானாமோ சிறைக் கொட்டடிகள் மூடப்படும் என்பது ஒரு கனவுதான்! 

அதேபோல, தீவிரவாதிகள் என்ற பூச்சாண்டி காட்டி பாகிஸ்தான், யேமன் போன்ற உலகின் பல பகுதிகளில் குண்டு வீச்சுக்கும் காரணமான ஆலோசகர்கள் இவர்கள்தான்! 

அமெரிக்க துப்பாக்கி கலாச்சாரத்துக்கு கொல்லப்படும் குழந்தைகளைவிட, மாணவர்களைவிட, இளைஞர்களைவிட, அப்பாவிகளைவிட இத்தகைய உளவுத்துறை அதிகாரிகளின் ஆலோசனைகளால் உலகம் முழுக்க கொல்லப்படும் குழந்தைகளின், அப்பாவிகளின் எண்ணிக்கை அதிகத்திலும் அதிகம். 

ஒபமாவின் வெளிவிவகாரக் கொள்கையை விமர்சித்து ஜிம்மி கார்டர் சொல்கிறார் இப்படி: "அமெரிக்காவின் சர்வதேச மனித உரிமை மீறல்களால் நம் எதிரிகளை நம் நண்பர்களுடன் ஓர் அணியில்  சேர்க்க வைத்துள்ளது!"

நடப்பு எதார்த்தங்களை தெரிந்து கொள்ளாமல் குளு குளு அறைக்குள் அமர்ந்து கொண்டு, கொடுத்த வாக்குறுதிகளை புறந்தள்ளிவிட்டு அப்பாவிகளை உயிருடன் கொன்று கொண்டிருக்கும் 21 ஆம் நூற்றாண்டின் நவீன பிர்அவ்ன்களை காலம் மன்னிக்காது! 


Source: http://www.iviews.com/, http://www.democracynow.org/ 
http://www.andyworthington.co.uk/




0 comments:

Post a Comment