NewsBlog

Tuesday, July 8, 2014

வெல்டன் ஜீ: 'இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை!'



அன்றைய தினம், போரூரில் அடுக்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தவுடன், முதல் அரை மணி நேரத்தில் அங்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்ட பலரில் அவனும் ஒருவன். 

இரவெல்லாம் ஓயாத கத்தல், கதறலுக்கு மத்தியில் வெறும் கைகளாலேயே பலரை உயிருடன் மீட்டுள்ளனர் இத்தகைய பல நண்பர்கள்.

அதன்பிறகு, தீயணைப்புப் படையினரும், மற்ற துறையினரும் வந்து அந்தப் பொறுப்பினை ஏற்று மீட்புப் பணிகளைத் தொடர்ந்திருக்கிறார்கள்.

இவன் காலில் கல் விழுந்து அடிபட்டு, மறுநாள் வீட்டுக்கு வந்திருக்கிறான்.

எனது நண்பன் அங்கு நடந்த சம்பவம் ஒன்றினைச் சொன்னான்:

'விபத்து நடந்த அந்த ஆரம்பக் கட்டத்திலேயே அங்கு நூற்றுக்கும் மேலான பொதுமக்கள் வந்திருந்து மீட்புப் பணிகளில் உதவிடும்போது, யாரோ ஒருவர் நூற்றுக்கணக்கான் பிஸ்கெட் பாக்கட்டுகளை வாங்கி வந்து மீட்புப் பணியிலிருந்தவர்களுக்குத் தந்துள்ளார்.

இன்னுமொருவர், ஓடிச் சென்று தெருவில் சென்று கொண்டிருந்த டீ விற்கும் சைக்கிளை அப்படியே அழைத்து வந்துள்ளார். டீ வண்டிக்காரர் அங்கிருந்த எல்லோருக்கும் டீ கொடுத்துள்ளார்.

நண்பர், தனது பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாயை எடுத்து டீ வண்டிக்காரருக்கு தர முயல, அவரோ,

"அய்யே.. இப்போ இதுதான் ரொம்ப முக்கியமா? நா ஓடிப் போய் இன்னொரு கேன் டீ கொண்டுட்டு வரேன். நீ போய், மாட்டிட்டு இருக்கவங்க யாரையாவது தூக்க முடியுமான்னு பாரு.. அத்த வுட்டுட்டு, காசு கொடுக்குது பாரு"

இதை அவன் என்னிடம் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டு,

"நாம நினைக்கிற மாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை போலிருக்குடா!" - என்றான்.

"அதைத்தாண்டா, சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, என வெவ்வேறு வடிவத்தில இலக்கியம் சொல்லுது!" - என்றேன்.

சொல்லி விட்டு, மறுபடியும் யோசித்தேன்.

'ஒருவேளை இதைத் (மட்டும்) தான் நமது இலக்கியங்கள் சொல்ல வேண்டுமோ?! "


- தகவல்:  Nasar Ali Ali
Nasar Ali Ali


0 comments:

Post a Comment