NewsBlog

Friday, June 7, 2013

வாழ்வியல்: 'சிறகுகள் விரியுங்கள்.. பறவைகள் போல!'

"வாழ்க்கை என்பது விமானப்பயணம். சிலருக்கான ஓடுதளங்களை அவர்களுடைய குடும்பமோ முன்னோர்களோ உருவாக்கியிருப்பார்கள். உங்களுக்கான ஓடுதளம் முன்னமே உருவாக்கப்பட்டிருந்தால், அதில் ஓடத் தொடங்கி உயரப்பறங்கள். இல்லையென்றால், உங்கள் ஓடுதளங்களை நீங்களே உருவாக்குங்கள்". - புகழ்பெற்ற பெண் விமானி ஒருவர் தன் சுய சரிதையில் எழுதியிருநதது இது.
உண்மைதான்! சில விஷயங்கள் இல்லையென்பதற்காகவே பலவற்றை செய்யாமல் விட்டு விடுகிறோம்.
போதிய கல்வி இல்லை, போதிய வசதி-வாய்ப்புகள் இல்லை என்பவையெல்லாம்  சொல்வதற்கான சில காரணங்களாகலாம்.  ஆனால் கடக்க முடியாத காரணங்கள் அல்ல.
பிறந்த சூழலிலும் வளர்ந்த சூழலிலும் இருக்கிற பின்னடைவுகள், புதிய இலக்குகள் நோக்கிப் புறப்பட உத்வேகம் தர வேண்டும். தகுதியின்மைதான் தகுதிகளைத் தேடிச் செல்வதற்கான அடிப்படைத் தகுதி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் கனவுகளை எட்டும் தகுதி உங்களுக்கு உண்டு என்கிற நம்பிக்கையை உறுதியாக உருவாக்கிக் கொண்டால், தகுதிக் குறைவுகளை எல்லாம் நிறைவு செய்கிற வழிகள் தாமாகவே புலப்படத் தொடங்கும். உதாரணமாக, சொந்தமாக ஒரு வீடு வாங்குவது என்கிற கனவு ஒருவர் காண்பதாக வைத்துக் கொள்வோம்.
அந்தக் கனவு, அவருக்குள் தோன்றிய ஆசையா, அல்லது நிர்ப்பந்தங்கள் காரணமாய் அப்படி ஓர் இலக்கை வகுத்துக் கொண்டாரா என்று முதலில் பார்க்க வேண்டும்.
சரி.. நிர்பந்தம் என்பது என்ன? உடன் பணிபுரிபவர்கள் எல்லாம் சொந்தமாக வீடுகட்டிக் கொண்டதால்.. தானும்  வீடுகட்ட வேண்டும் என்று நினைத்தால்.. அது நிர்ப்பந்தம்.
கனவு என்பது? சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்கிற தீவிரம் அவருக்குள் தணலாய் எரிந்தால்.. அது அவருடைய கனவு.
இந்த சூழல்களில் இப்படிப்பட்டவருக்கு ஏற்பட வேண்டிய நம்பிக்கை கலந்த துணிவு ஒன்றே ஒன்றுதான். "என்னுடைய கனவை என்னால் நிச்சயம் எட்ட முடியும்" – என்பதுதான் அது.
இதன்பிறகு என்ன? இலக்குகளை எட்டுவதற்கான வழிமுறைகள் மள மளவென்று பாதைகள் திறக்கும்.
  • கடன் வாங்குவது,
  • ஓய்வு நேரங்களில் டியூஷன் எடுப்பது,
  • புதிதாக வீடு கட்டும்போதே கீழே சில கடைகளைக் கட்டி வாடகைக்கு விடுவது
என்று விதம் விதமான வழிமுறைகள் அவை. ஒன்றை எட்டவேண்டும் என்கிற கனவு உங்களுடையதாக இருந்தால் அதனை எட்டுகிற உத்திகள், வழிகள், வாய்ப்புகள் எல்லாவற்றையும் உங்களின் தீவிரமே உருவாக்கித் தந்துவிடும்.
தயக்கம் படர்ந்த கனவுகள்தான் தேங்கிப் போகின்றன. தெளிவில்லாத இலக்குகள் நிச்சயம் குழப்பத்தையே உருவாக்கும் அல்லவா?
எந்தவோர் இலக்கைத் தொடுவதன்றாலும், முதலில் நீங்கள் கலந்துரையாட வேண்டியது உங்கள் மனதோடுதான்.
ஆம்.. ஒரு இலக்கை எட்ட நினைக்கும் முன் கொஞ்சம் ரிலாக்ஸாக கண் மூடி அமருங்கள்.
ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளியேற்றுங்கள். உங்கள் திட்டங்களை மனதில் காட்சிப்படுத்துங்கள்.  உங்கள் கனவென்னும் அந்த இலக்கு  தூரத்தில் தெரிகிற மலைச்சிகரமாக எண்ணி அதைச் சென்றடைவதற்கான வழிமுறைகள் குறித்து யோசியுங்கள்

அந்த இலக்கை எட்டத் தேவையான அடிப்படை வழிகள், எடுக்க வேண்டிய முயற்சிகள் அதற்கென ஆகக்கூடிய காலம் என்று எல்லாவற்றையும் மனதில் பட்டியலிடுங்கள். இந்த வழிகளை பலப்படுத்திக் கொண்டால் இலக்கை தொட்டுவிட  முடியுமா என்று உங்கள் மனதை கொஞ்சம் கேளுங்கள். அதன்பின் அசாத்தியமான நம்பிக்கையுடன் உங்கள் கனவை… இலக்கை..  எட்டுவதற்கான எல்லா முயற்சிகளையும் முழு வீச்சில் பிரயோகியுங்கள்.
உங்கள் உள்மனதில்  துல்லியமாகத் தெரிவதுதான் நாளைய நிஜம். உண்மையில் ஒவ்வோர் இலக்குமே ஒரு ஓவியம் போன்றதுதான்! கோடுகளுக்கு உயிர் கொடுக்கும் சிரத்தையான பணி அது.
எட்ட வேண்டிய உயரத்தை நோக்கி, மெல்ல.. மெல்ல.. படிப்படியாய் முயல்வது மிக உறுதியான எச்சரிக்கையுடன் காலெடுத்து வைக்கும் மெதுவான முன்னேற்றம் என்பதே அதன் பொருள்.
சிறந்த கல்வியாளராக வேண்டுமா? சிரத்தையுடன் படியுங்கள். படித்தவற்றை பிறருடன் பகிருங்கள். இது நினைவாற்றலை வளர்க்கும். உங்கள் இலக்கு என்னும் கரை கொண்டு சேர்க்கும்.
பிரபல எழுத்தாளராக வரவேண்டுமா?  நாள்தோறும் பல பக்கங்கள் ஈடுபாட்டுடன் படியுங்கள். பிற மொழி எழுத்துக்களை மொழிப்பெயர்த்துப் பாருங்கள். அதைவிட முக்கியம் வாழும் சமூகத்தை உற்று நோக்குங்கள்.
இப்படி படிப்படியாய் மேற் கொள்கிற முயற்சிகள் அனைத்தும் உங்களை முன்னேற்ற சிகரங்களை நோக்கி நகர்த்திக் கொண்டேயிருக்கும். ஒவ்வொரு நாளும், நீங்கள் எடுத்த முயற்சிகள் என்னென்ன, அந்த முயற்சிகளால் கிடைத்த முன்னேற்றங்கள் என்னனென்ன என்பதை பட்டியலிட்டுக் கொண்டே வாருங்கள்.
கடந்து வந்த தூரம்.. அது தரும் இன்பத்துக்கும், அடைய இருக்கும் எல்லையைக் குறித்த உற்சாகம் தரும் மகிழ்ச்சிக்கும் ஈடு இணை எதுவும் கிடையாது.
நீங்கள் எட்ட நினைக்கும் இலக்கைத் தொடுவதென்று நீங்கள் (Fixed) 'முடிவு' செய்துவிட்டால், உங்கள் முன்னேற்றம் அதன்பின் ‘Non Stop’தான் போங்கள்! அது யாருக்காகவும்.. எதற்காகவும் நிற்பதில்லை... மாறாக நீங்களாகவே வலிய நிறுத்தினாலே தவிர!
பிறகென்ன பாஸ்? ம்.. ஸ்டார்ட்.. ஓடுங்கள்! இலக்குகள் என்னும் வெற்றிகளை நோக்கி!

2 comments:

  1. மிக தன்னம்பிக்கை தரும் வரிகள்....தொடரட்டும் உங்கள் பனி...துஆ & வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Nice Work, Keep it up., its Usefull mater

    ReplyDelete