NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Saturday, November 30, 2013

நேர்காணல்: ராஜஸ்தான் தேர்தல்கள்: 'சீரான வகுப்பு சூழலோடு தேர்தல் களத்தில் வெல்ஃபர் பார்ட்டி'


 
இன்ஜீனியர் ரஷீத் உசேன், ராஜஸ்தான் மாநில வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர். தலைமையகத்தில் உற்சாகமாக அமர்ந்திருக்கிறார். அரசியல் ஒரு சாக்காடை என்று ஒதுங்கிப் போகாத சிந்தனையாளர். தூய்மையான அரசியல் மாற்றத்துக்காக களமிறங்கியிருப்பவர். பணிபுரிந்து கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனத்திலிருந்து விலகி, அரசியல் களத்திற்கு வந்திருப்பவர். அவருடைய நேர்காணலிலிருந்து..

"உண்மையில், வெல்ஃபர் பார்ட்டி ஐந்து வேட்பாளர்களை களத்தில் இறக்க முடிவெடுத்திருந்தது. ஆனால், எதிர்பாராத சில காரணங்களால் கடைசியில் நான்கு வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டி வந்தது. 

ஜெய்பூரின் 'ஹவா' மஹாலிலிருந்து வழக்குரைஞர் பாக்கர் பரூக்கும், முன்னாள் இணை ஆணையர் முஸ்தாக் அலி, 'ஜுன் ஜுனு' தொகுதியிலும், ஃபஸஹத் அலி 'ஸாவை' மதேபூரிலிருந்தும், 'கோட்டா தெற்கிலிருந்து' ஷபியுல்லாஹ்வும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்.

வேட்புமனுக்களை வாபஸ் பெறும் இறுதி நாளில் காங்கிரஸீடன் ஏற்பட்ட முக்கிய உடன்படிக்கையின் அடிப்படையில் வெல்ஃபர் பார்ட்டி ஸாவை தொகுதியிலிருந்து தனது வேட்பாளரை திரும்ப பெற்றுக் கொண்டது. அந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தானிஷ் அப்ரார் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தின் மிக முக்கிய பிரச்னைகளை பிரதானக் கட்சிகள் புறக்கணித்து வருகின்றன. இந்நிலையில் வெல்ஃபர் பார்ட்டி இவற்றை தனது கையில் எடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக 'கோபால்கர்' துப்பாக்கி சூடு, SHO-வின் சுர்வாவைச் சேர்ந்த Phool Muhammed ன் கொலை வழக்கு, இன்னும் 40 க்கும் மேற்பட்ட வகுப்பு கலவரங்களுக்கு காரணமான குற்றவாளிகள் முழுமையாக தண்டிக்கப்படாதது. இதேபோல, தலித் மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் ஏராளமான அநீதிகள் என்று பிரச்னைகளை கையில் எடுத்திருக்கிறோம். 

வெல்ஃபர் பார்ட்டி நடந்து முடிந்த 20 வகுப்பு கலவரங்களில் கொல்லப்பட்ட 100 பேரின் வழக்குகளை மறு விசாரணைக்கு எடுத்துள்ளது. 

நடக்கவிருக்கும் தேர்தல்களில் இவையெல்லாம் நிச்சயம் எதிரொலிக்கும்.

"காங்கிரஸீம், பிஜேபியும் ஒரே விதமாய் மதவாத கட்சிகளாக காட்சியளிக்கின்றவே?' - என்ற கேள்விக்கு நிதானமாக அழுத்தம் திருத்தமாக  இன்ஜீனியர் உசேன்,

"இரண்டு கட்சிகளும் தெளிவான வேறுபாடுகள் கொண்டவை. பிஜேபி சித்தாந்த ரீதியாக வகுப்புவாதம் கொண்டது. இதே ஒப்புமையை காங்கிரஸீடன் பொருத்திப் பார்ப்பது சரியல்ல. ஆனால், சில தீய சக்திகள் காங்கிரஸில் ஊடுருவி அதை வகுப்புமயமாக்கி வருவதையும், அந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் மறுப்பதற்கில்லை!" - என்று தெளிவாக பதில் அளிக்கிறார்.

".. முஸ்லிம்களின் பெயரால் அதிகாரத்துக்கு வரும் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் பாதிக்கப்படும் சிறுபான்மையினரின் குரல்களை எதிரொலிப்பதில்லை. 

இந்த நிலைமை மாற வேண்டும். அதனால், சிறுபான்மை இனத்தலைவர்கள் எழுச்சியுடன் மேலெழ வேண்டிய தருணமிது. அப்போதுதான் சிறுபான்மையினத்து பிரதிநிதிகளாய் அவர்களின் உண்மையான பிரச்னைகளை முன்னெடுத்து செல்ல முடியும்; உதாரணமாக ஜாட், யாதவ், குஜ்ஜார், தலித் இனத் தலைவர்களைப் போல!"

ராஜஸ்'தானின் வலிமை மிக்க தலைவராக விளங்கும் இன்ஜினீயர் உசேன் தெள்ளத் தெளிவாக சொல்கிறார்: "வெல்ஃபர் பார்ட்டி ஒருகாலும் வகுப்புவாத அரசியல் நடத்தாது. பொத்தாம் பொதுவாக எல்லா மக்களுக்கும் அதிலும் குறிப்பாக ஒடுக்கப்படும் அனைத்து இன மக்களுக்கும் பொதுவாக செயல்படும் அரசியல் கட்சியாகும். வகுப்புவாதம் நமது மதசார்பற்ற சமூகத்துக்கு ஒருகாலும்  பொருந்தாது"

"ராஜஸ்தான் மாநில தேர்தல்களில் மிகவும் கடுமையான போட்டிகள் நிலவும் சூழலில் வெல்ஃபர் பார்ட்டியின் வேட்பாளர்கள் வாக்குகளைப் பிரித்து வெற்றியைக் குலைத்துவிடமாட்டார்களா?" என்று கேட்டபோது, இன்ஜீனியர் உசேன் நிமிர்ந்து அமர்கிறார். புன்னகைத்தவாறு சொல்கிறார்:

"களத்திலிருக்கும் எண்ணற்ற பிராந்திய கட்சிகளை நோக்கி இந்த கேள்வி ஏன் எழுப்பப்படுவதில்லை. ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் விழிப்புணர்வு பெற்று தேர்தல்களில் பங்கெடுக்கும்போது அல்லது அதற்கான ஏதாவது முயற்சிகளில் ஈடுபடும்போது மட்டும் இந்த கேள்வி எழும்புவது ஏன்?"

அதே புன்னகையுடன் மீண்டும் தொடர்கிறார்: "... இதுவரை சிறுபான்மையினர் ஓரிரு அரசு சாரா அமைப்புகள் மூலம்தான் தங்கள் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இனி அத்தகைய அவல நிலை தேவையில்லை. நாங்கள் தேசிய நீரோட்ட அரசியலில் எங்கள் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள முடியும். நல்லதொரு வகுப்பு சூழலையும் இந்நாட்டில் உருவாக்க முடியும்!"

வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா ஜமாஅத்தே இஸ்லாமியின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அரசியல் அமைப்பாகும். இன்ஜினீயர் உசேனும் ஜமாஅத்தின் உறுப்பினராக இருந்தாலும் பிற சமூகத் தலைவர்களும் கட்சியில் இடம் பெற எந்த தடையும் இல்லை என்கிறார். 

தேர்தல்களில் ஜமாஅத்தின் ஆதரவை கோரவிருப்பதாகவும், அதேநேரத்தில் தொகுதிகளுக்கேற்ப முடிவெடுக்கும் அதன் அதிகாரத்தில் தலையிட முடியாது என்றும் தெளிவு படுத்துகிறார். 

தற்போது ராஜஸ்தானில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் ஜமாஅத் தனது முழு ஆதரவையும், வெல்ஃபர் பார்ட்டிக்கு தர இருப்பதையும் இன்ஜினீயர் உசேன் உறுதிப்படுத்துகிறார். 

தேர்தல் கொள்கை சம்பந்தமாக கேட்டபோது, "கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்திலிருந்து விலகி நிற்கிறோம். சோசலிஸ அமைப்பை முன்னெடுத்து செல்கிறோம். எங்களது பலம்; எங்கள் கொள்கைசார் தொண்டர்களால் கட்டமைக்கப்பட்டது. கூலிப்படையால் அல்ல. 

இந்தத் தேர்தல்கள் வியப்புகரிய முடிவுகளை தரவிருக்கிறது. நிச்சயம் இரண்டு இடங்களை நாங்கள் வெல்வோம்! குறைந்தளவு கணக்கு போட்டாலும் ஒரு இடத்தை வெல்வது நிச்சயம்!" - என்கிறார் இன்ஜினீயர் உசேன் பெரும் நம்பிக்கையோடு.

(Source:TwoCicles.net)


வளைகுடா செய்திகள்: 'பாலியல் கொடுமை இழைத்தவர்களுக்கு சிறை மற்றும் சவுக்கடி தண்டனை'


கடந்த அக்.22 இல், தஹ்ரானின் 'மால்' ஒன்றில் பெண்களிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களுக்கு வியாழன் அன்று தம்மாம் நீதிமன்றத்தால் சிறை மற்றும் சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட இளைஞர் ஒருவருக்கு 5 மாத சிறைதண்டனையும், இருவருக்கு 3 மாத சிறைதண்டனையும், நாலாவது நபருக்கு ஒரு மாத சிறைதண்டனை மற்றும் சவுக்கடியும், அடுத்தவருக்கு 2 மாத சிறைதண்டனையும் அளிக்கப்பட்டது. 18 வயது நிரம்பாத சிறுவர் ஒருவர் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு   அனுப்பப்பட்டார்.

குற்றச் செயலுக்கு ஆதாரமாக காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த 2 நிமிட வீடியோவை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு, சௌதியில் மகளிருக்கு எதிரான 2,797 குற்றச் செயல்கள் பதிவாகி தண்டனை அளிக்கப்பட்டன. 

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களில் சௌதி நாட்டவர் 60 விழுக்காடு 40 விழுக்காடு வெளிநாட்டவர் ஆவர். இதில் ரியாதில் 650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு முதன்மை இடத்தில் உள்ளது. ஜித்தா 250 வழக்குகளும், கிழக்கு பகுதிகளில் 210 வழக்குகள், மக்கா 180, மதீனா 170 வழக்குகளும் பதிவாகி உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

(Source: Arab News)

Thursday, November 28, 2013

பாசிஸத்தின் கோர முகங்கள்:'கிரிமினல்கள் பட்டியலின் முன்னணியில் பிஜேபி'



பல்வேறு கட்சிகளை சேர்ந்த மக்களவை  உறுப்பினர்களில் 76 பேர் கடும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு நீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளார்கள். அவர்கள் மீதுள்ள குற்றங்கள் ஊர்ஜிதமாகி இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமான தண்டனைப் பெற்றால் அவர்கள் மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

இந்த கிரிமினல் பட்டியலில் 18 பேருடன் முன் வரிசையில் பிஜேபி நிற்கிறது. அதற்கடுத்ததாக காங்கிரஸ் 14 உறுப்பினர்களுடனும், சமாஜ்வாடி கட்சி 8 பேர், பிஎஸ்பி 6 பேருடனும், அஇஅதிமுக 4 பேர் ஜேடி (யூ) 3 பேர், சிபிஐ எம் 2 பேர் மற்றும் உதிரி கட்சிகளிலிருந்து 17 பேரும் இந்த பட்டியலில் இடம் பெறுகிறார்கள்.

மோடியின் வலது கரமாய் விளங்கும் அமித் ஷா 2014 தேர்தல்களில் மக்களவை அரியணையை யாசிக்கிறார். இவர் மூவர் கொலைவழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தில்லி நீதிமன்றம் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ரஷீத் மஸ்ஊதையும், ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் லல்லு பிரசாத் யாதவையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து மக்களவை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்த தகுதி நீக்கம் செய்தது அனைவரும் அறிந்ததே.


 

நடப்புச் செய்தி: 'இரண்டு சம்பவங்கள்.. இந்திய நீதிமன்றங்கள்!'



நாட்டை உலுக்கிய இரண்டு கொலை வழக்குகள். தொடர்ந்து வெளிவந்திருக்கும் தீர்ப்புகள். நமது நீதி பரிபாலனத்தின் வெளிப்பாடு மற்றும்  ஜனநாயக அமைப்பை கேள்விக் குறியாக்கியுள்ளன.

முதல் வழக்கு ஆருஷி கொலை வழக்கு. 

தில்லியில் 2008 ஆம் ஆண்டில் 14 வயது சிறுமி ஆருஷி கொல்லப்படுகிறார். போதிய சாட்சியங்கள் இல்லாததால் வழக்கை கைவிட சிபிஐ நீதிமன்றத்தில் அனுமதி கேட்க நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை. விசாரணைக் குழு மாற பெற்றோர் கைது செய்யப்பட்டு அவர்கள்தான் கொலைக்காரர்கள் என்று தற்போது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வயதில் மூத்த பணியாளுக்கும், அருஷிக்கும் தொடர்பு இருந்ததாகவும், அதை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர் கருணைக் கொலை செய்துவிட்டதாகவும் சிபிஐ கூறியது. இதற்கான துரும்பளவு ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை.

விசாரிக்கப்பட்ட 14 சாட்சிகளில் ஒருவர் கூட பெற்றோர் குறிப்பிட்ட சாட்சிகள் இல்லை. பிரேத பரிசோதனை அறிக்கை இல்லை. கைரேகை தடயங்கள், உண்மை கண்டறியும் சோதனை முடிவுகள் என்று எதுவும் இல்லாமல் தல்வார் தம்பதி சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்குரைஞர் ரெபக்கா கூறியபடி, "சிபிஐ தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஜோடித்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது!" - என்பது நிஜமானது.

கடைசியில், ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.



இரண்டாவது வழக்கு சங்கரராமன் கொலை வழக்கு.

சங்கரராமன் காஞ்சி கோயிலின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர். 2004 இல் இவர் கொல்லப்பட்டார். மடத்துக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் கொலை செய்யப்பட்டதாக வழக்கு.

மடாதிபதி ஜயேந்திரர், துணை மடாதிபதி விஜயேந்திரர் உட்பட 23 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்கை புதுவைக்கு மாற்றினர். 

இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 1,873 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 370 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். 712 ஆவணங்கள் இணைக்கப்பட்டன.  ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறினார். குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் கதிரவன் சென்றாண்டு சென்னையில் கொல்லப்பட்டார். 




370 சாட்சிகளில் 187 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது அப்ரூவர் ரவி சுப்பிரமணியம், சங்கரராமனின் மனைவி பத்மா, மகள் உமா மைத்ரேயி உட்பட 83 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்றது. நான்காண்டுகளில் 4 முறை நீதிபதிகள் மாறினர். 

இவ்வளவு ஆவணங்கள், சாட்சிகள் இருந்தும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

சட்டம் ஒரு இருட்டறை என்பது அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்ற கவலையின் வெளிப்பாடு என்பதைதான் புரிந்துகொள்ள முடிகிறது. அது குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ள என்பது மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது!

Wednesday, November 27, 2013

காலப்பெட்டகம்: 'நீதியைத் தேடும் சங்கரராமன் கொலைவழக்கு!'

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரும் விடுதலை! போலீஸ் நிரூபிக்கத் தவறியதாக தீர்ப்பில் தகவல்! காஞ்சிமடத்தில் பட்டாசு வெடித்து கோலாகலம்!

உண்மைதானே! நடக்காத (!) ஒரு கொலைக்கு தீர்ப்பு எப்படி எழுதுவதாம்?  

சங்கரராமனா யார் அவர்? கேள்விப்பட்டதில்லையே! கண்ணால் பார்த்த சாட்சிகளும் இல்லை. "எங்களுக்குத் தெரியவே தெரியாது எஜமான்!" - சாட்சிகளின் தடாலடி பிறர் சாட்சியும் சேர்ந்து .. அய்யோ... பாவம் ..! சங்கரராமன்!

அது சரி.. இந்திய மனசாட்சியை கூண்டிலேற்றி தூக்குத் தரமுடியுமே! 

ஓஹோ.. அது அப்ஸல் குரு போன்ற செய்யாத குற்றங்களுக்கான அதுவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான தண்டனையா?

குற்றவாளிகள் விடுதலையானதற்கு காவல்துறைதான் காரணம் என்கிறாரே வழக்குரைஞர் சுதா ராமலிங்கம். அப்படியானால், காவல்துறையினரின் சர்வ அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கிற நமது முதல்வர் உடன் பதவி விலகுவாரா? அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ததற்காக சமீபத்தில் பரிசு மழையைப் பொழிந்தாரே அந்த பரிசுகளை திரும்பவும் பெற்றுக் கொள்வாரா?

பாஸிஸத்தின் வலிமையும், அதன் கருத்துருவாக்கமும், வரவிருக்கும் தேர்தல்களுக்கான திரைமறைவு நாடகங்களையும் இனி தமிழகம் பார்க்கவிருக்கிறது. அதன் திரை கண்ணோட்டம்தான் சங்கரராமன் வழக்கு.

அரியணைதான் நமது குறிக்கோள்; அதனால், ஓடி ஒண்டிக் கொள்ளுங்கள் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்களே!

வழக்கம் போல், எது நடந்தால் நமக்கென்ன விலக்கிப் போவீர் நடுநிலைவாதிகளே!

மறந்துவிடாதீர்.. நீதியைத் தேடுகிறது சங்கரராமனின் கொலை!












நடப்புச் செய்தி: நீதி வழுவாத எழுது கோலாகட்டும்



ஜமாஅத்தின் அகில் இந்தியா மாநாடு ஹைதராபாத்தில் நடந்த சமயம். மௌலான சித்திக் ஹஸன் சாஹெபை பேட்டி எடுப்பதற்காக அவரைச் சந்திக்க போய் இருந்தேன். தலைவர்கள் அறையில் பார்த்தால் இல்லை. விசாரித்து அவர் இருந்த இடம் தேடி சென்றால்.. சாதாரண தொண்டர்களோடு தொண்டராய் அவர் படுத்திருந்த மிகவும் எளிமையானவர் அவர்

மலைநாட்டு மைந்தனுக்கு உரிய வெள்ளை வேட்டி சட்டை, அதுவும் வேட்டியை ஒரு கையில் பிடித்துக் கொண்டு.. அக்குளில் இடுக்கிய சிறு தோல் பையுடன் அவர் களப் பணி ஆற்றிட கிளம்பும் அதிசயம்.
அதனால் தான் கேரளம் மண்ணின் இயல்புகளோடு இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளில் முதன்மை மாநிலமாக வெல்ல முடிந்தது. சிகரங்களை நோக்கி செல்கிறது. இன்ஷா அல்லாஹ் இன்னும் செல்லும் வெற்றிவாகைச் சூடும்.

மீடியா ஒன் தொலைக்காட்சி சேனல் தொடக்கவிழாவில் பேராசிரியர் சித்தீக் ஹஸன் ஆற்றிய உரையிலிருந்து....


இறைவனின் தனிப்பெருங் கிருபையால் நாம் இங்கே ஒரு மிகப்பெரும் பணியைத் தொடக்கியிருக்கின்றோம். மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது. பயமாகவும் இருக்கின்றது.

இந்த நேரத்தில் ஒரே ஒரு குறிப்பை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

'தஃவத்' ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அதிகாரப்பூர்வ ஏடாக (வாரம் மும்முறை) தலைநகர் தில்லியிலிருந்து  கடந்த அறுபதாண்டுகளாக வெளி வந்து கொண்டிருக்கின்றது.
 
இன்றும் இதில் வரும் ஆக்கங்கள் நாடு முழுவதும் மட்டும் அல்ல, வெளிநாடுகளிலும் ஆர்வத்துடன் வாசிக்கப்படுகின்றன. அதில் வெளியாகும் கட்டுரைகளும் தலையங்கங்களும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் வருகின்றன.

பல்லாண்டுகளுக்கு முன்பு அந்த இதழின் ஆசிரியராக மௌலானா முஹம்மத் முஸ்லிம் என்கிற ஒப்பற்ற, தன்னலமற்ற, தலைவர் இருந்தார்.

அவருடைய சிந்தனைகளைப் போன்றே அவருடைய எழுத்துக்களும் கூர்மையானவை. இதயங்களைச் சிலிர்த்தெழச் செய்பவை.
அவர் பன்முக ஆற்றல் கொண்டவர். சமூக ஆர்வலர். அழைப்பாளர். நீதி தவறா நேர்மையாளர். மௌன உழைப்பாளி. இலட்சிய எழுத்தாளர்.

பேனாவும் கையுமாக இருந்தாலும் அவருடைய தொடர்புகளும் பரந்து விரிந்திருந்தன. அவருடைய காலத்தில் இந்த நாட்டில் இருந்த எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்கள் என பலத் தரப்பினருடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார் அவர்

அந்தக் காலத்தில் நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த பிளிட்ஸ் ஆங்கில இதழாசிரியர் பி.கே. கரன்ஜியாவும் அவருடைய நண்பர்களில் ஒருவர்

பிற்காலத்தில் பிரதமராக உயர்ந்த கலை ஆர்வம் மிக்க அரசியல் தலைவர் இந்தர் குமார் குஜ்ராலும் அவருடைய நண்பர்தான்

அன்றும் இன்றும் ஓயாது எழுதிக்கொண்டிருக்கும் மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யாரும் அவருடைய நண்பர்தான்

இவ்வாறு ஏராளமான நண்பர்களைப் பெற்றிருந்தார் மௌலானா முஹம்மத் முஸ்லிம்.

அவருடைய வீட்டுக்கும் இந்தப் பிரமுகர்கள் வருவார்கள். நிறைய நேரம் பேசிக் கொண்டிப்பார்கள். இயக்கப் பணிகளுக்காக எழுத்து சேவைக்காக வாழ்வையே அர்ப்பணித்திருந்த மௌலானாவின் வீட்டில் ஏழ்மை குடி புகுந்திருப்பதை அந்தப் பிரமுகர்களும் பார்த்தார்கள்.

அவர்களில் ஒருவர் மௌலானா முஹம்மத் முஸ்லிம் சாகிபிடம் சொன்னார்:
"ஒரு யோசனை சொல்லட்டுமா? ஒரே நாளில் உங்களுடைய வாழ்வே தலைகீழாக மாறிவிடும்!"

மௌலானா மௌனமாக அவரையே பார்க்க அந்தப் பிரமுகர் தொடர்ந்து சொன்னார்

"உங்களுடைய பேனாவை சற்றே வளைத்து விடுங்கள். வாழ்க்கை சிறந்துவிடும்"

அதனைக் கேட்ட மௌலானா நிதானமாக, தீர்க்கமாக, அழுத்தம்திருத்தமாகச் சொன்னார்

"இறைவனின் உவப்பைப் பெறுவதற்காகவும் மறுமையில் வெற்றி பெறுவதற்காகவும் கையில் எடுத்துள்ள பேனா இது. இது உடையுமே தவிர எந்தக்காலத்திலும் வளையாது"

அன்பர்களே!

மீடியா ஒன் சேனல் தொடங்கியிருக்கின்ற இந்த வேளையில் நான் கூற விரும்புகின்ற செய்தியும் ஒன்றே ஒன்றுதான்.

உங்களுடைய பேனா உடைந்து போகலாமே தவிர, வளையக் கூடாது!

புகழ் அனைத்தும் இறைவனுக்கே!


தகவல்: டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்