NewsBlog

Saturday, August 29, 2020

விமர்சனங்களைத் தாண்டி சாதனைப் படைத்த 'அரே ஓ சம்பா!' - ஷோலே

 

இந்த மாதம் 45-ஆம் ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது என்றும் பசுமையான இந்திப் படமான "ஷோலே" (Cult movie).

கமல், ஸ்ரீவித்யா, ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ‘அபூர்வ ராகங்கள்’ வெளிவந்த ஆகஸ்ட் 15, 1975-ஆம் ஆண்டில்தான் இந்தப் படமும் வெளிவந்தது.

அப்பா தயாரிப்பில் மகன் ரமேஷ் சிப்பி இயக்க,  ஆர்.டி.பர்மன், சலீம்-ஜாவேத் கூட்டணி அமைந்திருந்தனர்.

‘அந்தாஸ்’ (1971), ‘சீதா அவர் கீதா’ (1972) போன்ற படங்களுக்குப் பிறகு, இயக்குநர் ரமேஷ் சிப்பி ஹாலிவுட் பாணியில் ஒரு படம் எடுக்க எண்ணி அதனை ஜாவேத் அக்தரிடம் தெரிவித்தார். சலீம் ஜாவேத் இரட்டையர்கள் ‘ஷோலே’யின் ஒரு வரிக்கதையை ரமேஷ் சிப்பியிடம் சொல்ல, பின்னர் ஏகப்பட்ட மாற்றங்களுடன் திரைக்கதை உருவானது.  நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். 1973-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதியில் படப்பிடிப்பு தொடங்கியது.

1950-களில் குவாலியர், ராம்கார் (Ramgarh) பகுதியில் இருந்து கொண்டு பக்கத்துக் கிராமங்களில் கொள்ளையடித்துக் கொண்டிருந்தவன் கப்பர் சிங். தன்னிடம் பிடிபடும் காவலர்களின் காது, மூக்குகளை வெட்டிக் காவலர்களை நடுச்சாலைகளில் போட்டுவிடும் அளவு கொடியவன் அவன்.

இந்த உண்மைச் சம்பவமும், திலீப்குமார் கொள்ளையனாக நடித்து வெற்றி பெற்ற ‘கங்கா ஜமுனா’ (Gunga Jumna -1961) மற்றும் பாக்கிஸ்தானியப் படைப்பாளர் இப்னே ஷபியின் (Ibn-e-Safi ) உருது நாவலின் பாத்திரங்களும் இயக்குநர் ரமேஷ் சிப்பிக்கு உள்ளூக்கம் தந்தன. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, நூறு விழுக்காடு வில்லனாக உருப்பெற்றதுதான் கப்பர் சிங் பாத்திரப் படைப்பு.

இந்தப் படத்தின் சக்திவாய்ந்த, கொடூரமானக் கொள்ளைக்காரன் பாத்திரமான கப்பர் சிங் வேடத்தில் நடிக்க முதலில் டேனியை (Danny Denzongpa) ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இயக்குநர் சங்கரின் ‘எந்திரன்’ படத்தில் ரஜினிக்கு  வில்லனாக டாக்டர் போரா பாத்திரத்தில் நடித்த அதே டேனிதான் அவர்)

அந்த நேரத்தில் டேனி ஏற்கனவே இயக்குநர் ஃபெரோஸ்கானின் ‘தர்மாத்மா’ படத்திற்குக் கால்ஷீட் கொடுத்திருந்ததால் ‘ஷோலே’ ஒப்பந்த்த்திலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில், தர்மேந்திரா, அமிதாப் இருவரும் கப்பர் சிங் பாத்திரத்தில் நடிக்க விரும்பினார்கள். பின்னர் வில்லன் பாத்திரம் தங்களது இமேஜைப் பாதிக்கலாமென எண்ணி அந்த எண்ணத்தைக் கைவிட்டனர் என்பதை ‘ஷோலே’ நாற்பதாவது ஆண்டு விழாவில் இயக்குநர் ரமேஷ் சிப்பி நினைவு கூர்ந்தார்.

இயக்குநர் ரமேஷ் சிப்பி வழக்கமான வில்லன்களிலிருந்து கப்பர் சிங்கை மாற்றிக் காட்ட விரும்பினார். அதற்காக வில்லனின் உடை மற்றும் வழக்கு மொழிகளில் மாற்றம் கொண்டு வந்தார். 'கப்பர் சிங்'கிற்கு ராணுவ உடை அணிவித்தார். வில்லனின் மொழியை வட இந்தியாவில் புகழ்பெற்ற  காரிபோலி (Khariboli) மொழியுடன், இந்தியைக் கலந்து பேச வைத்தார்.

இத்தகைய ஒரு சூழலில்தான் நாடக மேடைகளில் வளரிளம் பருவ நடிகராக வலம்வந்து, ‘ஹிந்துஸ்தான் கி கசம்’ (1973) படத்தில் அறிமுகமாகியிருந்த அம்ஜத்கானைக் கப்பர் சிங் பாத்திரத்திற்குச் சிபாரிசு செய்கிறார்கள் சலீம் ஜாவேத் இரட்டையர்கள்.

தாடி வளர்க்கவிட்டு, ஃபோட்டோ ஷூட் நடத்தியதில், அச்சு அசலாக இயக்குநரின் 'கப்பர் சிங்' பாத்திரத்திற்குப் பொருந்திப் போனார் அம்ஜத்கான்.

வில்லனாகத் தேர்வுசெய்யப்பட்ட பிறகு, ‘சம்பல் கொள்ளையர்கள்’ குறித்து ஜெயபாதுரியின் (ஜெயாபச்சன்) தந்தை தருண்குமார் பாதுரி எழுதி வெளிவந்த நூலான ‘அபிஹ்ஷாப்த் சம்பல்’ (Abhishapth Chambal) படித்துத் தனது பாத்திரத்திற்கு மெருகேற்றினார் அம்ஜத்கான்.

‘ஷோலே’ யின் முக்கியமான இரயில் சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு ஏழு வாரங்கள் நீடித்தது. அப்போதெல்லாம், ஏழு வாரங்களில் ஒரு படமே எடுத்துவிடுவார்கள். இப்போதிருப்பது போல் VFX தொழில்நுட்ப வசதிகள் இல்லாமல், கிடைத்த தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, வெடிபொருட்கள், துப்பாக்கிகள், ஸ்டண்ட் நடிகர்கள், குதிரைகள் என ஏற்பாடு செய்து, ரயில் சண்டைக் காட்சியை எடுத்து முடித்தார்கள் என்பது வியப்பானது.

யே தோஸ்தி ஹம் நஹி தோடெங்கே,
தோடெங்கே தம்-மகர்,
தேரா சாத் னா சோடெங்கே .....

(We will never break our friendship
Till my last breath
I will not leave your side ..)


என்ற நட்பின் பெருமை பேசும் பாடலில் தர்மேந்திரா பைக் ஓட்டுவார். பைக்கின் 'சைட் கார்' படுக்கை வசதிகளுடன் தனியாகத் தயாரிக்கப்பட்டிருக்கும். தர்மேந்திரா அமிதாப் என மாறி மாறி அதில் அமர்ந்திருப்பார்கள்.

பாடலின் முடிவில் அமிதாப் தோள் மீது தர்மேந்திரா அமர்ந்திருந்து 'மௌத் ஆர்கன்' வாசிக்க, அமிதாப் விசிலடிக்க, பைக் பறக்க கிஷோர்குமாரும் மன்னாடேயும் தங்கள் மந்திரக் குரலால் அசத்தியிருப்பார்கள். இந்தக் காட்டசி 21 நாள் எடுக்கப்பட்டது.

படப்பிடிப்பினூடேதான் ஜெயா பாதுரி தன் முதல் குழந்தை ஸ்வேதாவைப் பெற்றெடுத்தார். அந்த ஸ்வேதாதான் இப்போது, மாடலாக, படைப்பாளராக, பத்திரிகையாளராக டெலி நடிகராக தூள் பரப்பிக் கொண்டிருக்கிறார்.

‘ஷோலே' படப்பிடிப்பின்போது, ஜெயா பச்சன், நான்குமாதக் கருவாக அபிஷேக் பச்சனைச் சுமந்து கொண்டிருந்தார். இதுவும் படம் விரைந்து வெளியிட முடியாமல் போனதற்கான காரணங்களில் ஒன்றானது.

'ஷோலே' திரைப்படம் ஒட்டு மொத்தமாக உருவாகி வெளியிட 500 நாட்களாயின.

குரோசாவா அகிராவின் (Akira Kurosawa) வின் பிரசித்திபெற்ற ஜப்பானியத்  திரைப்படம் ‘Seven Samurai’ (1954). 16-ஆம்  நூற்றாண்டின் பிற்பகுதியில் (1586) நடந்த ஜப்பானிய வரலாற்றின் நிகழ்வைக் கொண்டு எடுத்த திரைப்படம்.

ஒரு மலைக்கிராமத்தின் அறுவடைக்குக் காத்திருக்கும் மொத்தப் பயிர்களையும் கொள்ளையடிப்பார்கள் கொள்ளையர்கள். அந்தக் கொள்ளையிலிருந்து, பயிரைக்  காப்பாற்றுவதற்காக ஏழு சாமுராய்களை வாடகைக்கு அமர்த்துகின்றனர் மலைக்கிராம விவசாயிகள். இந்த மூலக் கதையிலிருந்துதான் ‘ஷோலே’ திரைப்படமானது.

ரயில் சண்டைக்காட்சியை எடுத்துக் கொண்டால், 1903 ஆம் ஆண்டு வெளிவந்த பேசாபடமான ‘The Great Train Robbery’ படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்டதாகும்.

‘ஷோலே’யில் பயங்கர ஆயுதங்களோடு யாருக்கும் அடங்காத கொள்ளைக்காரன் கப்பர் சிங்கைப் (அம்ஜத்கான்) பிடிக்க இரண்டு கிரிமினல்களை (தர்மேந்திரா, அமிதாப்பச்சன்) கூலிக்கு அமர்த்துகிறார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான சஞ்சீவ் குமார். இதுதான் திரைப்படத்தின் கரு

‘மெஹ்பூபா மெஹ்பூபா,
குல்ஷன் மெய்ன் குல் கில்தே ஹே,
ஜப் செஹ்ரா மெய்ன் மில்தே ஹே,
மெய்ன் அவுர் தூ’ 

- என்ற புகழ்பெற்ற ‘ஷோலே’ பாடல் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தனித்த கிரேக்கப் பாடகர் டெமிஸ் ரூசோஸின் (Demis Roussos)

‘Say You Love Me
Of all the things you're telling me,
I ever heard you say’ 

-என்ற பாடலிலுள்ள ராகத்தின்  அப்பட்டமான ஜிராக்ஸ் பிரதிதான் என அப்போது விமர்ச்சனமும் எழுந்தது. ஆனால், ‘மெஹ்பூபா’ பாடலுடன் நில்லாமல், ஒரு சரித்திரமும் சொல்லும்.

கப்பர் சிங்கிற்கு ஆயுதம் வழங்கும் ஜிப்ஸிகள் கப்பர் சிங் தங்கள் பகுதிக்கு வருவதைத் தாக்கூருக்குத் (சஞ்சீவ் குமார்) தெரிவிக்க, வீருவும் (தர்மேந்திரா) ஜெய்யும் (அமிதாப்) கப்பர் சிங்கைப்பிடிக்க ஜிப்ஸிகள் பகுதிக்கு வருகை தருவார்கள். அப்போது, ஆடலர் ஹெலனும், ஜலால் ஆகாவும் பிரத்யேக தோற்றத்தில் ஆடிப் பாடுவார்கள். இந்த பாடலுக்கு ஃபில்ம் ஃபேரின் சிறந்த பாடகர் விருது, பாடகர் ஆர்.டி. பர்மனுக்குக் கிடைத்த்து. பின்னாளில் இந்த பாடலின் ராகம், பாடகர் மகேஷ் குமாரினால் மும்பையின் திருமண மண்டபங்களில், ‘லட்டு லா லட்டு லா, மிர்சிஸ் மூ ஜல்தா ஹை’ என்ற வரிகளோடு  வரலாறானது. ஆர்டி பர்மனும், ஆனந்த் பக்சியும் கலை ரசிகர்களின் உள்ளங்களை இதுவரையிலும் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதும் உண்மை.

107 நிமிடத்திற்குப் பிறகுதான் கப்பர் சிங் திரையில் தோன்றுவார். அதுவரை அவரைச்சுற்றியே கதை இயங்கிக் கொண்டிருக்கும்.

தர்மேந்திரா, சஞ்சீவ் குமார், அம்ஜத்கான், ஹேமமாலினி, அமிதாப் பச்சன், ஜெயபாதுரி, அஸ்ரானி, ஜெக்தீப், ஹெலன் என நடிகர் பட்டாளம் அணிவகுத்து நிற்கும்.

படத்துக்கு முன்பதிவு பிரமாதமாக இருந்தது. ஆனால், சொல்லி வைத்தார் போல, எல்லா பத்திரிகைகளும் ‘படம் தேறாது’’ என்று விமர்சனம் எழுதியதால், மொத்த திரைப்பட யூனிட்டும் அதிர்ச்சிக்கு ஆளானது.

முதல் வாரத்தில் இயக்குநர் ரமேஷ் சிப்பி குழம்பித்தான் போனார். பம்பாய் மினர்வா அரங்கம் நிறைந்த இருக்கைகளுடன் நிசப்தமாகவே இருந்தது. விநியோகிஸ்தர்கள், விளம்பரதாரர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் எல்லாம் ‘இது தங்கள் பேரழிவின் தொடக்கமோ?’ என்று அச்சப்பட்டதாக பின்னாளில் அறிவிக்கிறார்கள்.

இந்தியா டுடே (India Today) இதழின் புகழ்பெற்ற திரை விமர்ச்சகர், கே.எம்.அல்மாதி, "எல்லாமே முடிந்துவிட்டது. சக்திவாய்ந்த உரையாடல்களால் கூட ஒரு கைதட்டலையோ, விசில் சத்தத்தையோ ரசிகர்களிடமிருந்து பெறமுடியவில்லை!" - என்று எழுதினார்.

மூன்று வாரங்களுக்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறியது. அகன்ற திரையிடலும், ஸ்டீரியோ ஃபோபோனிக் ஒலி அமைப்பின் தன்மையும் ரசிகர்களை இருக்கைகளுடன் கட்டிப் போட்டுவிட்டதே உண்மை. பம்பாய மினர்வா அரங்கின் கைதட்டல், விசில் சத்த ஒலிகள், அமிதாப் தர்மேந்திராவின் மரணக் கணங்கள சிதறடிக்க, ஜெயபாதுரி வருகை அரங்கில் கண்ணீரால் நிறைத்த்து.

இரண்டு ஆண்டுகள் ஓடிய ‘பர்சாத்’,  (Barsaat-1949), மூன்று ஆண்டுகள் ஓடிய ‘முகல்லே ஆஸம்’, (Mughal-e-Azem- 1960), மூன்றரை ஆண்டுகள் ஓடிய ‘கிஸ்மத்’ (Kismet-1943) இவைகளின் சாதனைகளை ஷோலே முறியடித்தது. ஐந்தாண்டுகள் தொடர்ந்து ஓடி சரித்திரச் சாதனை புரிந்தது.

சென்னை சத்யம் திரையரங்கில் ஓராண்டிற்கும் அதிகமாக வழக்கமான திரையிடலில் (ரெகுலர் காட்சிகளாக) ஓடிய முதல் தமிழல்லாத படம் ‘ஷோலேவாகத்தான் இருக்கும்!

வெறும் 3 கோடி பட்ஜெட்டில் உருவான ‘ஷோலே’ 30 கோடி வசூலை அள்ளித் தந்த்து. ரஷ்யாவில் மட்டும் ஆறு கோடி ரசிகர்கள் ‘ஷோலே’ படத்தை ரசித்துப் பார்த்திருக்கிறார்களாம்.

கடந்த 50 ஆண்டுகளில் மக்களின் மனம் கவர்ந்த மிகப் பெரிய வில்லன்கள் பட்டியலில் அம்ரீஸ் பூரி (Mr India), ராமதிர் சிங் (Gangs Of Wasseypur),  பிரேம்நாத் (Bobby),  ரன்வீர் சிங் (Padmaavat), சஞ்சய் தத் (Kancha Cheena) போன்றோரைப் பின்னுக்குத் தள்ளி பட்டியலில் முதலிடத்தில் 'கப்பர் சிங்' அம்ஜத்கான்தான் அமர்ந்துவிட்டார்.

‘ஷோலே’ திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணம், கதை சொன்னவிதம், முதன் முறையாக ஸ்டீரியோஃபோனிக் ஒலி அமைப்பில் அசத்திய பிரம்மாண்டக் காட்சிகள், இந்தியாவின் முதல் அகன்ற 70 எம். எம். திரையிடல், பாடல்கள், காட்சிகள் படமாக்கப்பட்ட விதங்கள், இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்கள், புதுமையான அமிதாப்பின் மேனரிஸங்கள், கப்பர் சிங் வில்லன் பாத்திரம், சாதாரண ரசிகனைத் திருப்திப்படுத்தும் விதங்கள் எனச் சொல்லிக் கொண்டேபோகலாம்.

முதன்முறையாக இந்தியத் திரைப்பட வரலாற்றில் 100 திரையரங்குகளில் வெள்ளிவிழாக் கொண்டாடிய முதல் படம் ‘ஷோலே’. அத்துடன் 60 திரையரங்குகளில் பொன்விழாவும் கண்ட படம் அது.

2002 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் நடத்திய வாக்கெடுப்பில் இந்தியாவின் மிகச்சிறந்த 10 திரைப்படங்களில் ‘ஷோலே’ முதலிடத்தைப் பிடித்தது. 2005 ஆம் ஆண்டு நடந்த 50-ஆம் ஃபில்ம்-ஃபேர் விருது விழாவில் கடந்த 50 ஆண்டுகளின் மிகச்சிறந்த படமாகவும் ‘ஷோலே’ விருதுபெற்றது.

2014 ஆம் ஆண்டு ஜனவரியில் 3 D வடிவிலும் ‘ஷோலே’ மறுவெளியீடு செய்யப்பட்டது. படத்தின் ஒலிச்சித்திரம் மற்றும் உரையாடல்கள் தனித்தனி  இசைத்தட்டுகாளாக வெளியாகிச் சாதனைகள் படைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு படம் வெளியீட்டிற்கு முன், வெற்றிபெறுமா, பெறாதா என்பது பற்றிய முடிவை எந்தக் கொம்பனாலும் உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் வெற்றி பெற்ற பிறகு, ‘எதனால் படம் வெற்றி பெற்றது?’ அல்லது ‘தோல்வியுற்றது?’ என்பதனை விளக்க ஒரு கோஷ்டியே வரிசைகட்டும் என்பார் சுஜாதா.

ஷோலே’ வெற்றிக்குப் பிறகு அப்படித்தான் எண்ணற்ற கட்டுரைகள், விமர்ச்சனங்கள் வந்தன. அவற்றில் சுவாரஸ்யமான விசயங்கள் இவை:

‘ஷோலே’ வெற்றிக்குப் பிறகு இந்தித் திரைப்படங்களின் வில்லன் பாத்திரங்களில் அம்ஜத்கானின் கப்பர் சிங் மேனரிஸங்கள், உரையாடல் பாணிகள் எனப் பாலிவுட் மாறத் தொடங்கியது.

பாலிவுட.டின் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளைத் தூங்கவைக்க, ‘இப்ப தூங்கலன்னா கப்பர் சிங் வந்துருவான்’ (soja beta warna gabbar jaigea -sleep baby else Gabbar will come) என்பது போன்ற வசனங்களைப் பேசத் தொடங்கினார்கள்.

ஒரு வில்லன் விளம்பரப் படத்தில் நடிப்பதைத் தொடங்கி வைத்தவர் அம்ஜத்கான். ‘கப்பர் சிங்’ பாத்திரமாகவே பிரிட்டானியா குளுகோஸ் பிஸ்கட் விளம்பரப் படத்தில் ஒருவர் நடித்தார் (Popularly known as Gabbar Ki Asli Pasand)

இந்த அம்ஜத்கானைத்தான் சுஜாதாவின் கதையில் உருவான ‘விக்ரம்’ (1986) படத்திற்குச்  சலாமியா நாட்டின் சுல்தானாகக் கொண்டுவந்தார் கமல்ஹாஸன்.

‘ஷோலே’யின், பிரம்மாண்ட வெற்றியின் 16 ஆண்டுகள் கழித்து, மீண்டும் 1991-ஆம் ஆண்டு, அம்ஜத்கானைக் கதாநாயகனாக வைத்து ‘ராம்கர் கி ஷோலே’, (Ramgarh Ke Sholay) என்ற பகடிப் படம் ஒன்றும் வெளிவந்த்து.

‘ஷோலே’ படம் பற்றிய சில புத்தகங்கள்கூட வெளியாகியிகியுள்ளன. குறிப்பிட்டுச் சொல்வதானால், பென்குவின் வெளியீடாக 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ‘Sholay : The Making of a Classic’ என்ற நூலை சொல்லலாம்.

‘ஷோலே’ குறித்து இந்தியா முழுவதும் நிறைய விவாதங்கள், ஆய்வுகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இரட்டையர்களில் ஓருவரான ஜாவேத் அக்தர், ஒரு நேர்காணலில் ‘ஷோலே’ படத்தின் கதை பல வரலாறுகளைக் கண்டது என்று கூறியிருக்கிறார்.

‘ஷோலே’ திரைப்படத்தில் மேற்கத்தியப் படங்களின் சாயல் இருப்பது விமர்ச்சனங்களில் சுட்டிக்காட்டப்பட்டன.

உலகத் திரைப்பட வரலாற்றில் புகழ்பெற்ற இயக்குநர்களுள் குறிப்பிடத் தக்கவர் இத்தாலியின் செர்ஜியோ லியோன்.

இவரது இயக்கத்தில் வெளிவந்த ‘ஒன்ஸப்பான் ஏ டைம்’ பட வரிசையில், ஹென்றி ஃபான்டா, சார்ல்ஸ் ப்ரான்ஸன் என நட்சத்திரப் பட்டாளம் கலக்கிய ‘ஒன்ஸப்பான்ய  டைமின்தி வெஸ்ட்’ (Once Upon a Time in the West)- படம் 1968 ஆம் ஆண்டு வெளியானது. அதில் முதன் முறையாக வில்லன் பாத்திரத்தில் ஹென்றி ஃபான்டா கலக்கியிருப்பார்.

அந்தப்படம் இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே அமெரிக்காவில் பார்த்துவிட்டதாக ஒரு நேர்காணலில்  குறிப்பிட்டார் ஜாவேத் அக்தர். அதன் பாதிப்பை ‘ஷோலே’யின் பல காட்சிகளில் காணலாம்.

‘ஷோலே’ படத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை விமர்ச்சிக்கும் கட்டுரை ஒன்றைச் சாகித்ய விருதாளர் எஸ். ராமகிருஷ்ணன் 2005 ஆம் ஆண்டு எழுதும்போது, ‘ஷோலே’ திரைப்படம் பத்து ஆங்கிலப் படங்களின் காட்சிகள், கதை வடிவங்களைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகிறார். ‘The Great Train Robbery (1903), ‘Seven Samurai ( 1954), ‘Garden Of Evil’ (1954), ‘The Searchers’ (1956), ‘One-Eyed Jacks’ (1961), ‘Once Upon a Time in the West’ ( 1968), ‘Butch Cassidy and the Sundance Kid’ (1969), ‘The Wild Bunch’ (1969) என்று பட்டியல் நீள்கிறது.

இத்தனை படங்களிலிருந்து காட்சிகள், பாத்திரங்களின் மேனரிஸங்கள், பாடல்களின் பாணி, உருவி எடுக்கபட்டிருப்பதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். இத்தனையும் தங்களது படத்திற்கு தேவையான முறையில் உருமாற்றித் திரைக்கதையை உருவாக்கியவர்கள் சலீம் ஜாவேத் இரட்டையர்கள் (சலீம் அப்துல் ரஷீத்கான், ஜாவேத் அக்தர்) என்கிறார்கள் அவர்கள்.

‘ஷோலே’ படத்தில் வரும் வன்முறைக் காட்சிகள் திடுக்கிட வைக்கின்றன.

இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருந்த அம்ஜத்கானின் நடிப்பு பலரையும் கவர்ந்திருந்தது. ‘படத்தில் வந்த சில காட்சிகள் சாதாரண கற்பனையில் தோன்றக்கூடியவை அல்ல’ - என்கிறார், சாகித்ய விருதாளர் அசோகமித்திரன்.

உலகத்தின் எந்த மூலையில் ஒரு நிகழ்வு நடந்து, மக்கள் அதிகமாகப் பேசத் தொடங்கினால், அதுகுறித்து கருத்துச் சொல்லி ஒரு கட்டுரை எழுதும் பழக்கமுடையவர் இவர். 2008 ஆம் ஆண்டு ஜூலை 21-இல், ‘ஷோலே’ திரைப்படம் பற்றியும் எழுதினார்.

‘கப்பர் சிங்கின் நக்கலான வசன உச்சரிப்பும் சட் சட்டென்று மாறும் முகபாவனைகளும் கவர்ந்திருக்கின்றன. ஆனால், ‘ஷோலே’யின் பெருவெற்றிக்கு அமிதாப்பின் உடல்மொழி முக்கியமான காரணம் - என்பதாகக் குறிப்பிடுகிறார். மேலும், ‘ஷோலே’ எழுபத்தெட்டில்தான் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது என்று நினைக்கிறேன்.  அப்போது நான் பதினொன்றாம் வகுப்பு மாணவன்’ - என்றும் எழுதியிருக்கிறார்.

உண்மை என்னவென்று பார்ப்போம்.

1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள்  இந்தியா முழுவதும் வெளியான ‘ஷோலே’ திரைப்படம், அதே நாளில் சென்னையில் சத்யம், காசினோ, பைலட் திரையரங்குகளில் வெளிவந்தது, மூன்று தியேட்டர்களிலும் 100 நாட்கள் ஓடியதைப் பதிவுசெய்கிறார் இந்தியத் திரைப்பட வரலாற்றாய்வாளரும் தமிழ் சினிமாவின் நடமாடும் தகவல் களஞ்சியமுமான ஃபில்ம் நியூஸ் ஆனந்தன்.

இதுவரை சொல்லப்படாத மிகச்சிறப்பான கதை என ‘ஷோலே’ திரைப்படம் புகழப்பட்டாலும், அதன் திரைக்கதாசிரியர்கள் சலீம் – ஜாவேத் மீது சில விமர்ச்சனங்களும் வந்தன.

1.’பானி அன்ட் க்லைட்’ (1967):

‘க்லைட் பாரோ’ (Clyde Barrow) மற்றும்   எலிஸபெத் பார்க்கர் (Bonnie Elizabeth Parker) - இருவரும் கிரிமினல் இணையர்கள். வங்கிக் கொள்ளைக்குப் புகழ்பெற்றவர்கள். இவர்களின் வாழ்க்கை நிகழ்வைச் சித்தரிக்கும் படம்தான் ’பானி அன்ட் க்லைட் (Bonnie and Clyde’) 1967 ஆம் ஆண்டு வெளியாகி, புதிய ஹாலிவுட் கலாச்சாரத்தை உருவாக்கிய படம் இது. செக்ஸ், வன்முறை, கொடுமையான மரணம் ஆகியவற்றைக் கலந்து கொடுக்கும் புதிய திரைப்படங்களுக்கு மூலப்படமாக அமைந்த படம். விருதுகளைக் குவித்ததோடு, கலாச்சார, வரலாற்று ரீதியான அழகியல் படமென்று 1992-ஆம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய ஃபில்ம் பதிவேட்டில்  பதிவுசெய்யப்பட்ட படம்.

2.’புச் கேசிடி அன்ட் சன்டேன்ஸ் கிட்’ ( 1969) :

வங்கி மற்றும் ரயில் கொள்ளைகளில் ஈடுபட்டு, மரணித்த பின்பும் பல கொள்ளைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையைத் திணறடித்த இரட்டைக் கொள்ளையர்களான புச் கேசிடி மற்றும் சன்டேன்ஸ் கிட் ஆகிய இருவரின் வாழ்க்கையைப் பிரதிபலித்த படம் இது.

பால் நியூமனும் ராபர்ட் ரெட்ஃபோர்டும் இரட்டைக் கொள்ளையர்களாகக் கலக்கிய படம். பல விருதுகளையும் பெற்றது. 2003 ஆம் ஆண்டு அமெரிக்க நூலகக் காங்கிரஸின் தேசிய ஃபில்ம் பதிவேட்டில் (National Film Registry) பதிவுசெய்யப்பட்ட திரைப்படம் ‘புச் கேசிடி அன்ட் சன்டேன்ஸ் கிட்’, (Butch Cassidy and the Sundance Kid-1969) இந்த இரண்டு படங்களையும் உல்டா பண்ணி ‘ஷோலே’ திரைப்படத்தில்  தெளித்திருக்கிறார்கள் சலீம் ஜாவேத் இரட்டையர்கள் என்ற விமர்ச்சனம் அது.

இந்த விமர்ச்சனம் ஒருவேளை உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் ‘ஷோலே’யின் அற்புதக் கேமிராக் கோணங்கள், இயக்கம், மக்களோடு ஒன்றெனக் கலந்திட்ட வசனங்கள், நடிகர்களின் இயல்பான நடிப்பு, பாடல்கள், தர்மேந்திரா - அமிதாப் வசனங்களில் தெறிக்கும் நட்பின் மேன்மை போன்றவை சினிமா இதயங்களை இன்னும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

படத்தில் கப்பர் சிங்கின் வசனமொன்று வரும், "கப்பர் கே டாப் சே தும்ஹே ஏக் ஹை ஆத்மி பச்சா சக்தா ஹை, ஏக் ஹை ஆத்மி ... குட் கப்பர்" (There is only one man who can save you from Gabbar's heat, only one man...Gabbar himself.) இந்த வசனத்திலிருந்து நாம் புரிந்துகொள்வது இதுதான்:

‘உங்களைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள். நீங்கள்தான் உங்களைக் காப்பற்றிக் கொள்ளவேண்டும். தற்போதயக் கொரோனா தீநுண்மி கிருமித் தொற்றும் அதைத்தான் நமக்குக் கற்றுத் தந்துகொண்டிருக்கிறது.

'''''''''''''''''''''''

விமர்சகர்: பென்ஸி. (Kadayanallur Benzy - https://www.facebook.com/kadayanallur.benzy)

0 comments:

Post a Comment