NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Wednesday, April 24, 2013

சிறப்புக் கட்டுரை:“யார் அந்த 'மகா'த்மா?”



அநீதியான அந்தக் காட்சியைக் கண்டதும், கண்கள் கோபத்தால் ‘ஜிவ்’ வென்று சிவந்துவிடுகின்றன. நாசி துவாரங்களிலிருந்து வெளிப்படும் மூச்சுகூட சூடாக வெளிவருகிறது.
“ஆம்..! இதை அனுமதிக்கவே முடியாது!”
இனியும் தாமதிக்க  பொறுக்காமால், அதை தடுத்திட திடமாக முன்னேற துடித்து நிற்கிறீர்கள்.
ஆனால், கடைசி நொடியில், “உனக்கு ஏம்பா இந்த வம்பு? எவனாவது எக்கேடாவது கெட்டுப் போறான். ‘அக்காடா’ என்று கண்டும் காணாமலும் உன் வேலையை பார்ப்பியா!”
எங்கிருந்தோ ஒரு குரல் உங்களைத் தடுத்துவிடுகிறது. நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ அந்த குரலுக்கு உடனே பணிந்து விடுகிறீர்கள்.
சுயநல குரல்:
சற்று நேரம் முன்வரை,
உங்கள் முன் நடந்து கொண்டிருந்த ஒரு தீமையை .. அக்கிரமத்தை களைய வீறு கொண்டு எழுந்த நீங்கள்,
  • உங்கள் பெற்றோர் மூலமாகவோ,
  • உங்கள் உற்றார்-உறவினர் மூலமாகவோ,
  • உங்கள் அன்பு மனைவி-மக்கள் மூலமாகவோ அல்லது
  • உங்கள் மனத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள சுயநலம் மூலமாகவோ எழுப்பப்பட்ட குரலுக்கு அடிபணிந்து நீங்கள் மௌனமாகி விட்டீர்கள்.
பிறகு, அத்தீமை பகிரங்கமாக அரங்கேறிவிடுகிறது. ஜக ஜோதியாக தங்குதடையின்றி சமூகம் முழுவதும் அணிவகுத்து ராஜநடை போட ஆரம்பித்த விடுகிறது.
தனிநபரும்-சமூகமும்:
சமுதாயத்தில் வன்முறைகளும், கொலை – கொள்ளைகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், போதை பொருட்களும், குடி, சூதாட்டம் போன்றவைகளும் ஊடுருவி மனித குலத்தின் ஒழுக்கத்தை சிதைத்து சமூக அமைப்பை நாசம் செய்து கொண்டிருக்கின்றன. காணும் இடமெல்லாம் தீமைகள் மண்டிக்கிடக்கின்றன.
 

இந்த அவல நிலை குறித்து,
சமுதாயத்தின் அங்கத்தினர்களான நாம் நிச்சயம் கவலைப்படாமல் இருக்க முடியாது. ஏனென்றால், சமுதாயம் என்பது பல தனி நபர்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பில் இணையாமல் தனித்து, மனிதன் இயங்குவதென்பது சாத்தியமற்ற செயலாகும். இப்படிப்பட்ட தனி நபர்களின் கூட்டமைப்பான சமுதாயத்தில் உருவாகும் நன்மைகளும், தீமைகளும் ஒவ்வொருவரையும் பாதிக்கவே செய்யும்.
சமுதாயம் என்பது ஒரு தோணி என்றால்,
நாமனைவரும் அதில் பயணிக்கும் பயணிகளாவோம். இந்த பயணிகளில் யாராவது ஒருவர் தோணியின் அடிப்பாகத்தில் துளையிடுவார்களேயானால்.. நிலைமை என்னவாகும்?
சிறிது நேரத்திலேயே நீர் உள்ளே புகுந்து தோணி நீரில் மூழ்கிவிடும். அதில் பயணம் செய்யும் எல்லோரும் மரணத்தை தழுவ நேரிடும். அதனால், இப்படிப்பட்ட ஒரு செயலை நாம் நிச்சயம் அனுமதிக்கவே மாட்டோம்!. “நமக்கென்ன?” – என்று தோணியை துளையிடும் நபரின் செயலைக் கண்டு நாம் சும்மாயிருக்க மாட்டோம்.
யார் காரணம்?
சமுதாயத்தில் தீமைகளும், ஒழுக்க சீர்கேடுகளும் உண்டாவதற்கு என்ன காரணம்? ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்களேன்!
ஏதோ ஒரு விதத்தில் சம்பாதித்த பணம்தான் உள்ளதே என்று தனியார் கல்விசாலைகளை நிறுவிக் கொள்கிறோம். நன்கொடை வகையறாக்களில் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு சீரான பாதையை அமைத்துக் கொடுக்கும் நம்மில் வசதி கொண்டோரின் சுயநலச் செயல்கள்!


தங்களுடைய அன்றாட வாழ்க்கைக்கே ‘தகிடத்தோம்!’ போடும் அடிமட்டத்தில் உழல்பவர்கள் தம் பிள்ளைகளும் ‘ராஜாக்களாக’ வேண்டும் என்று கனவு காண்பதென்னவோ உண்மைதான்! ஆனால், நடைமுறையில், செயல்படுத்தும் போதுதான் அதன் சுமையை அவர்கள் உணர முடிகிறது. அதையும் மீறி அரசு பள்ளிகளில் படிக்க வைக்கப்படும் பிள்ளைகளின் பள்ளிச் சூழலும், வீட்டுச் சூழலும் அவர்களை கல்வியில் பின்தங்க வைத்துவிடுகிறது; ஆரம்ப பளளியுடனேயே அவர்களின் கல்விக்கு ஓய்வு கொடுத்துவிடுகிறது.
நாளடைவில் இவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும்போது,
  • சோம்பேறிகளாக,
  • பேட்டை பிஸ்தாக்களாக,
  • திருடர்களாக,
  • ஜேப்படிக்காரர்களாக,
  • முரடர்களாக
உருமாறி கடைசியில் சமூக விரோத கும்பலாக உருவெடுத்துவிடுகிறார்கள். இந்த சமூக விரோதிகள் ‘சமூகத்தைவிட்டு வெளியேறிவிடுவார்களா?’ என்றால்.. அதுதான் இல்லை! இவர்களின் ஜனனமும், மரணமும் இதே சமூகத்தில்தான் பல தலைமுறை தலைமுறையாக சுழன்று கொண்டிருக்கும்.
இதன் விளைவு?
உல்லாச வாகனங்களில், நெடுஞ்சாலைகளில் வழுக்கிச் செல்லும் செல்வச் சீமான்களின் இளைய தலைமுறையினர் முன், இந்த சமூக விரோத இளந்தலைமுறையினர் அரிவாள்,கத்தியுமாக காரை வழிமறித்து நிற்கும்போதுதான் விபரீதம் தெரிய ஆரம்பிக்கிறது. இத்தகைய வன்முறைகளால் மண்டை உடைந்து குற்றுயிரும்-குலை உயிருமாகும் மகன்களைக் கண்டு கதறி அழும் நிலைக்கு நம்மில் பலர் தள்ளப்பட்டிருக்கிறோமே இந்தச் சூழலுக்கு யார் காரணம்?

பொன்னகை அணிந்த மாளிகைகள்! புன்னகை மறந்த மண் குடிசை!
சலவை கற்களால் மாட மாளிகைகளை அமைத்துக் கொண்டு ஏசி தந்த சுகமான குளுகுளுப்பில் ஃபோம் மெத்தைகளின் மென்மையான அரவணைப்பில் புரளும் உல்லாசவாசிகள்..
விடிந்தபின் தம் வீட்டின் எதிரே, அக்கம் பக்கத்தில்.. சுற்றிலும் குடிசைவாசிகளின் கழிவுகளைக் கண்டு கடிந்து கொண்டால்..
அவர்கள் என்ன செய்வார்கள்?
“அய்யா…! எங்களுக்கு வீடமைத்து கொடுக்க வேண்டாம்! எங்கள் பிள்ளைகளுக்கு கல்விச் செல்வம் தர வேண்டாம்! எல்லாம் எங்கள் விதியென்று நொந்து  கொள்கிறோம். ஆனால், ‘இது’ எங்களையும் மீறிய இயற்கை உபாதையாயிற்றே! நாங்கள் இதை எவ்வாறு சகித்துக் கொள்ள முடியும்?
சுகாதார சீர்கேடு என்று நீங்கள் கத்துவதால்.. நாங்கள் என்ன செய்ய முடியும்?, சரி.. எங்களுக்காக வேண்டாம்! உங்களுக்காக.. உங்களுடைய தூய்மைக்காக.. நீங்கள் வீடுகளை அமைத்து கொள்ளும் முன்னரே எங்களைக் குறித்தும் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டாமா? முதலில் எங்களுக்கு கழிவிடங்களைக் கட்டிக் கொடுத்துவிட்டு அதன் பிறகல்லவா நீங்கள் வீடுகளை கட்டிக் கொண்டிருக்க வேண்டும்.?” – என்று புலம்பல் – பரிதவிப்புகளுடன் வேகமாக வளர்ந்துவரும் ஏழை சமூக அமைப்பு. இந்த ஒட்டு மொத்த அமைப்பும் சமூகத்துக்கு எதிராக திரும்பும்போது இவர்களை யார் தடுத்து நிறுத்துவது?
பலவீனமான அரசு இயந்திரம்
அரசாங்க கடிவாளம் தங்கள் கையில் உள்ளது என்ற மமதையில், ஆட்சி பீடங்களில் அமர்ந்திருப்போர் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்து, குறுக்கு வழிகளில் லஞ்ச – லாவண்யங்களில் சுகம் தேட ஆரம்பிக்கிறார்கள். தகுதியின் அடிப்படைகள் பின்தங்கி, தகுதியின்மைகள் அரங்கேறும்போது, அரசாங்கம் பலவீனமடைந்துவிடுகிறது. இதன் விளைவு..? வரி சுமை, விலைவாசி உயர்வு இத்யாதிகளில் ஒட்டுமொத்தமான சமுதாயமும் தள்ளாடும்போது, அதை ஸ்திரப்படுத்துவது எப்படி?
“அடிப்பாவி! கேடு கெட்ட சிறுக்கி.. உன் மயக்கும் பார்வைக்கு பலிகிடாவாக என் புருஷன்தானா கிடைத்தான்? என் வாழ்க்கையையே நாசம் செய்து விட்டாயே! என் வாழ்க்கையில் கொள்ளி வைத்துவிட்டாயே! நீ நாசமாகப் போக!”-என்று கதறும் இல்லத்தரசியைப் பார்த்து,
“நான் என்ன செய்வது சகோதரி?
உனக்கு வசதிகளும், வாய்ப்புகளும் இருந்ததால்.. மணமகன் வீட்டார் கேட்ட சீர்.. செனத்தி வரதட்சணை என்று எல்லாவற்றையும் கொடுத்து எங்களுக்கு முன்னமே வாழ்க்கையைத் தேடிக் கொண்டாய்!
ஏதுமற்ற ஏழைகளான நாங்களோ, காலம் முழுவதும் கன்னியாகவே மடிந்து விடவேண்டும் என்று எண்ணுவது நியாயமா சகோதரி? நாங்களும் ஏதாவது ஒரு வகையில் வாழ்ந்துதானே ஆக வேண்டும்? உங்களைப் போல சுயநலவாதிகள் இருக்கும்வரை … எங்களைப் போல ‘கேடு கெட்டவர்களும்’ இருக்கத்தான் செய்வார்கள். காலம் முழுக்க உங்களுக்கும் நிம்மதியில்லை! எங்களுக்கும் சாந்தியில்லை!”- என்று ரத்தக் கண்ணீரை வடிக்கும் அபலைப் பெண்கள் உருவாக யார் காரணம்?
எத்தனை, ‘நேருக்கு நேர்..’ ‘சொல்வதெல்லாம் உண்மை!’ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதை கண்டிருக்கிறோம்.
வீதிதோறும் ஒட்டப்படும் ஆபாச சுவரொட்டிகளையும், தியேட்டர் தோறும் திரையிடப்படும் வன்முறை படங்களையும் காணும் இளம் தலைமுறையினர்,
மஞ்சள் பத்திரிகைகளையும், கொச்சை எழுத்துக்களையும் படித்து ‘ஆன்மா’ செத்துவிட்ட ‘நாளைய சிற்பிகள்’ பிஞ்சிலேயே வெம்பிவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டு தரம் கெட்டவர்களாக மாறிவருவதற்கு என்ன பரிகாரம்?


திருட்டு, கொலை – கொள்ளைகள், சிறுமிகளையும் துரத்திக் கொண்டிருக்கும் பாலியல் வன்கொடுமைகள், கற்பழிப்புகள், சமய நல்லிணக்க சீர்குலைவுகள், விபச்சாரம், குடி, சூதாட்டம் போன்ற தொடரும் சமூகத் தீமைகளும், ஒழுக்கக் கேடுகளும் சமுதாயத்தில் தழைத்தோங்கி மேலோங்கும்போது,  பாதிக்கப்படுவது யார்?
நாம்தானே?
நம் சகோதரர்கள்தானே?
நம் அண்டை – அயலார்தானே?
நம் பிரியத்திற்குரிய நண்பர்கள்தானேஃ
யார் தடுப்பது?
சமுதாயத்தில் மிதமிஞ்சி கொழுந்துவிட்டெரியும் தீமைகளை யார் தடுப்பது?
சிதைந்து கொண்டிருக்கும் சமூக அமைப்பை சீர் செய்யப் போகும் அந்த ‘மகான்’ யார்?
அலைகளில் சிக்கித் தவிக்கும் இத்தோணியை வழிநடத்தும் படகோட்டி எங்கே?
அவர் வானத்திலிருந்து.. அதோ அந்த மேகக் கூட்டங்களை கிழித்துக் கொண்டு பாய்ந்து.. பறந்து வருவாரா? அல்லது
இதோ இந்த பூமியை “படார்” – என்று பிளந்து கொண்டுதான் வருவாரா?
சமுதாயத்தில் மண்டிக் கிடக்கும் தீமைகளையும், ஒழுக்க சீர்கேடுகளையும் களைந்து அமைதியை நிலைநாட்டி.. தூய்மையான சமூகத்தை உருவாக்கப் போகும் அந்த ‘மகாத்மா’ எங்கே..? எங்கே??
சுற்றி… சுற்றி ரீங்காரமிடும் இந்தக் கேள்விகளுக்கு பதில் .. ஒரே ஒரு பதில் “அது நீங்கள்தான்!”
ஆம்..! சமுதாயத்தில் மலிந்து போயிருக்கும் சீர்கேடுகளை களையும் உன்னத பணி நம்மில் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் உண்டு.

ஒரு பிடி மண்
ஏனென்றால், ‘தீ’ பற்றி எரியும் வீட்டைக் கண்டு யாரும் தயங்கி நிற்பதில்லை. தம்மால் இயன்றளவு ஒரு கைப்பிடி மண்ணையாவது ஒவ்வொருவரும் அள்ளிப் போட்டாலும் கூட போதும்! சில நிமிடங்களிலேயே அத்தீயை நிச்சயம் அணைத்துவிடலாம். அதற்கு முதலில் தேவையானது:
“அய்யோ! தீ என்ற அச்ச உணர்வும்..
“அணைக்க வேண்டும்!” – என்ற துடிதுடிப்பும்தான்!
அதேபோல, சமுதாயத்தில் மலிந்துவிட்ட தீமைகளையும், ஒழுக்கக் கேடுகளையும், நான் களைந்தே தீருவேன்!”-என்று கங்கணம் கட்டிக் கொண்டு திடமான மனதுடன், உருக்குப் போன்ற நெஞ்சுடன் ஒவ்வொரு சமூக அங்கத்தினரும் எழுச்சியுடன் முன்வர வேண்டும்.
தியாக சிந்தனைகளின் எழுச்சி
  • எந்த தீமைகள் நடைபெறுவதையும்  நான் அனுமதிக்க மாட்டேன்!
  • லஞ்ச – லாவண்யங்களை ஊக்குவிக்க மாட்டேன்!
  • கல்வி – அறிவை சிறந்த முறையில் எல்லோருக்கும் எட்டச் செய்து கல்லாமையை முற்றிலும் ஒழிப்பேன்!
  • விஷ காளானாக பரவி வரும் ஆபாசத்தை ஒழித்தே தீருவேன்!
  • பெண்களுக்கு உரிய கண்ணியத்தையும், அந்தஸ்தையும் கட்டிக் காப்பேன்! அவர்களது பாதுகாப்புக்கு முழு உத்திரவாதம் தருவேன்! அவர்களை கேவலமான வணிக சந்தையாக்குவதை ஒருகாலும் அனுமதிக்க மாட்டேன்!
  • சமயங்களின்  பெயரால் நடைபெறும் ‘ரத்தக் களறியை’ கண்டிப்பாக தடுத்து நிறுத்துவேன்.
  • ஒவவொருவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பேன். அடுத்தவர்களை என் சகோதரர்களாக பாவித்து அவர்களின் உரிமைகளுக்கு நான் பாதுகாவலனாக நிற்பேன்!
  • என் கண் முன் நடைபெறும் ஒரு கடுகளவு அநீதியையும் என்னால் சகித்துக் கொள்ள முடியாது! இதில் என் உயிரே போனாலும்கூட பரவாயில்லை!
  • நந்தவனமான ‘சமூக பூங்கா’ சீரழிந்து போவதை என்னால் காண முடியாது!
- என்று சிறியோர் முதல் முதியோர்வரை சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் தியாக மனப்பான்மையுடன் வீறுகொண்டு எழ வேண்டும்.
இத்தகைய எழுச்சியில், பிணக்காடாகவும், நாற்றமெடுக்கும் சாக்கடையாகவும்.. கள்ளிச் செடிகளாகவும் மண்டிக் கிடக்கும் சமுதாயம் என்ற நந்தவனம் தென்றல் தவழும் ‘பூஞ்சோலையாக’ மாற முடியும். சாந்தியும், சுபிட்சமும் அதில் தழைத்தோங்கவும் செய்யும். 


(இந்தக் கட்டுரை மணிச்சுடர் நாளேட்டில் 'அபாபீல்' என்னும் புனைப்பெயரில் நான் எழுதி 01.09.1988 அன்று பிரசுரமானது. ஏறக்குறைய ஒரு கால் நூற்றாண்டு கழிந்த பின்னும் நம் சமூக அமைப்பில் எந்த மாற்றமும் நிகழாதது வருத்தத்துக்குரியது)

Tuesday, April 23, 2013

விருந்தினர் பக்கம்: 'இசுலாமியர்களுக்கு ஆகப்பெரும் சவால்...!'



கொஞ்ச நாளைக்கு முன்பு எனது அலுவலகத்திற்கு டிசைன் செய்ய இருவர் வந்தார்கள். போட்டோவை எல்லாம் கொடுத்தார்கள். நான் அதை ஆல்டர் பண்ணிக்கிட்டு இருந்தேன். 
 
அதில் ஒரு போட்டோல இருந்தவர் மட்டும் பார்ப்பதற்கு இசுலாமியர் போல் இருந்தார். ஆனால் அவரும் இந்து தான். 
 
அதைப் பார்த்த ஒருவர், "என்னடா... முஸ்லிம் மாதிரி... தீவிரவாதி மாதிரி இருக்கான்!"- என்றார். 
 
அவரிடம் நான் விவாதித்து இருப்பேன். என்னோடு வேலை பார்க்கும் என் இசுலாமியர் நண்பரின் முகத்தை பார்த்தேன். எந்த சலனமும் இன்றி வேலை செய்து கொண்டு இருந்தார். 
 
என் நண்பரை சங்கடப்படுத்த விரும்பாமல் நானும் அமைதியாகி விட்டேன். அந்த சம்பவம் இன்றுவரை என் நெஞ்சை அறுத்துக் கொண்டே இருக்கிறது...

அப்போது என் மனதிற்குள் தோன்றியது " இவர் தீவிரவாதிகளை நேரில் பார்த்திருக்க மாட்டார், அவர்களோடு பேசியிருக்க மாட்டார், அவர்களின் குணாதிசயம் என்ன என்பதும் இவருக்கு தெரியாது. அதுபோலவே முஸ்லிம்களோடும் பழகி இருக்கமாட்டார், முஸ்லிம்களின் எண்ணம், சிந்தனை, நேயம் இவை எதுவும் இவருக்கு தெரியாது. ஆனால் முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்ற நம்பிக்கை அதாவது பொதுப்புத்தி மட்டும் அசைக்க முடியாமல் இருக்கிறது!"

அவரது எண்ணத்திற்கு அடிப்படை காரணம், 
 
  • எல்லோரும் சொல்கிறார்கள், 
  • எல்லோரும் நம்புகிறார்கள் 
  •  நாமும் சொல்வோம், 
  • நாமும் நம்புவோம் 
 
- என்ற பொதுப்புத்தி தானே...? 
 
இந்த பொதுப்புத்தியை மாற்ற என் சகோதரர்களாகிய இசுலாமியர்களிடம் என்ன திட்டம் இருக்கிறது? 
 
இந்த பொதுப்புத்தி உங்களை வாழவிடாமல் சீரழிக்கிறது என்பதை உணருகிறீர்களா? 
 
உணர்ந்து கொண்டால் மட்டும் போதுமா?? 
 
என்ன செய்யப் போகிறீர்கள்??? 
 
மாற்று சிந்தனையை உருவாக்குங்கள்; உங்களோடு பயணிக்க எம் போன்றவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடு....!

- அங்கனூர் தமிழன் வேலு

Monday, April 22, 2013

இளைய சக்தி: 'புகையால் அழிந்துவரும் இளந்தலைமுறை'



இரண்டாண்டுகளுக்கு முன்னர் அடையாறு புற்றுநோய் நிலையம் நடத்திய ஆய்வில் இதுவரையும் வெளிப்படாத அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை கண்டறிந்தது. இரண்டாம் வகுப்பு பயிலும் சிறார்கூட புகையிலைக்கு அடிமைப்பட்டிருந்த சோகமே அது. 

சென்ற வாரம் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பணிப்புரியும் தலைமையாசிரியர் வகுப்பில் புகையிலையை மெல்லும் சில மாணவர்களை கையும்-களவுமாக பிடித்தது இன்னும் கவலையை அளிக்கிறது.

புகையிலைக்கு அடிமைப்படுவோரின் வயது நாளுக்கு நாள் குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10-15 வயதுக்குட்பட்ட மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் சமூக நலனில் அக்கறையுள்ளோருக்கு கவலைத் தருபவையாகும்.


  • 3.2 விழுக்காடு மாணவர்கள் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தகிறார்கள்.
  • இன்னும் 1.6 விழுக்காடு பேர் புகையிலைப் பொருட்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
  • 2.4 விழுக்காடு மாணவர்கள் 14 வயதிலிருந்தும்
  • 2.9 விழுக்காடு பேர் 10-13 வயதிலிருந்தும் புகையிலையை பயன்படுத்துகிறார்கள்.
  • 3.6 விழுக்காடு பேர் 15 வயதிலும்
  • 3.7 விழுக்காடு பேர் தங்களின் 12 வயதிலும் இன்னும்
  • 5.8 விழுக்காடு மாணவர்கள் தங்களது 11 வயதிலும் புகையிலைக்கு வசப்பட்டிருக்கிறார்கள்.
இதில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் குடும்பம் மூலமாக புகையிலைக்கு அடிமைப்பட்டிருந்தது தெரிந்தது. இன்னும் 28.6 விழுக்காடு பேருக்கு புகையிலை பெற்றோருக்கு அதை வாங்கி தருவதன் மூலம் பரிச்சயமானது.

புகையிலைப் பொருட்களை அடுத்தவர் பயன்படுத்துவதைப் பார்ப்பதால்.. புகையிலை எளிதில் கடைகளில் கிடைப்பதால்..பெற்றோருக்கு புகையிலைப் பொருட்களை வாங்கி வருவது இவை எல்லாமே இந்த பழக்கத்துக்கு இளந்தலைமுறையினரை தள்ளியுள்ளது.

நுங்கம்பாக்கத்தில் இயங்கும் பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் சொல்கிறார்: “எங்கள் பள்ளியின் அருகிலேயே நிறைய பெட்டிக் கடைகள் உள்ளன. அங்கு எப்போதும் புகைப்பவர்கள் அதிகம். எங்கள் பள்ளியின் மாணவரிடையே புகையிலையை பயன்படுத்தும் பழக்கம் இல்லாவிட்டாலும் இந்த சூழல் இவர்களை பாதித்துவிடுமோ என்று அச்சமாக உள்ளது!”

இந்த அச்சம் சமூகம் முழுக்க பரவ வேண்டும். ஏனென்றால்.. புகையிலை என்னும் நச்சால் பாதிக்கப்படுவது இந்தியாவின் இளைய சிற்பிகள். ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்கால தலைவர்கள். 

SOURCE : THE HINDU - 22.04.2013.

Sunday, April 21, 2013

ஆளுமை: 'இந்தியாவின் ஏழ்மையான.. தூய்மையான முதல்வர்!'



“மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அதீதமான நம்பிக்கையின் வெளிப்பாடுதான் தேர்தல் வெற்றிகள் மூலம் எங்கள் மீது சுமத்தியிருக்கும் பொறுப்புகள். மக்களின் ஒத்துழைப்பைக் கொண்டு மக்களுக்கு நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றியாக வேண்டும். இதில் எங்களது முக்கிய குறிக்கோள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகும்!”- இப்படி சொன்னது யார் தெரியுமா?

ஐந்தாவது முறையாக திரிப்புரா தேர்தல்களில் வெற்றிவாகைச் சூடி, முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட இடதுசாரி இயக்கத்து மூத்த தலைவர் மணிக் சர்க்கார்தான்!

திரிபுரா சட்டமன்றத்தின் மொத்த 60 தொகுதிகளில் இடதுசாரி கூட்டணி 50 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘இந்தியா டுடே’யின் துணை ஆசிரியர் ‘கௌஸிக் தேகா’ மணிக் சர்க்காரை பிரத்யேகமாக பேட்டிக் கண்டார். அவர் கேட்ட ஒரு கேள்வி வித்யாசமானது. அதற்கான பதிலும் சிந்திக்க வைப்பது. 

இதோ அந்த கேள்வியும் – பதிலும்:

?கேள்வி: “தேர்தல் பிரச்சாரத்தின் போது, நீங்கள் உங்கள் அரசின் சாதனைகளைச் சொல்லாமல் காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பேசுவது ஏன்?”

!பதில்: “எனது மக்கள் எனது அரசு அவர்களுக்கு என்ன செய்தது என்று நன்றாகவே அறிவார்கள். அதை நான் ‘சுயதம்பட்டம் அடித்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், இளைய தலைமுறைக்கு ‘காங்கிரஸ் தங்கள் மாநிலத்துக்கு செய்தது என்ன?’ - என்று வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய முக்கிய பொறுப்பு உள்ளது .... “ 

நான்காவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட மணிக் சர்க்கார் குறித்து சில முக்கியத் தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது இந்திய இளந்தலைமுறையினர் மீதுள்ள பொறுப்பாகும். நமது நாட்டில் இன்னும் ஆதர்ஷ புருஷர்களாக சில தலைவர்கள்  வாழ்கிறார்கள் என்று ஜனநாயக அமைப்பை பலப்படுத்தி நம்பிக்கைத் தரும் தகவல்கள் அவை:


  • இந்தியாவின் மிக ஏழையான.. அதேநேரத்தில் மிகத் தூய்மையான தலைவர் மணிக் சர்க்கார்.
  • மாநிலத்து முதல்வராக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பவர்.
  • இவருக்கு சொந்தமாக ஒரு வீடுகூட இல்லை.
  • மணிக் சர்க்காரின் வங்கி இருப்பு வெறும் ரூபாய் 6,500 மட்டும்தான்!
  • முதல்வர் பொறுப்புக்கான ஊதியம் முழுவதையும் கட்சிக்கான நன்கொடையாக கொடுத்துவிடுகிறார். கட்சி தரும் குறைந்த பட்ச உதவித் தொகையான ரூபாய் 5,000 பெற்றுக் கொள்கிறார்.
  • மணிக் சர்க்காரின் இல்லத்தரசி அரசு வாகனத்தை ஒருநாளும் பயன்படுத்துவதில்லை. ரிக்‌ஷாவில் எந்தவிதமான ‘பந்தா’வும் இல்லாமல் சர்வசாதாரணமாக பயணிப்பதை ‘அகர்தலா’வாசிகள் நன்கறிவார்கள்.
  • மணிக் சர்க்காரின் பரம அரசியல் எதிரிகளும் அவரது தூய்மையையும், எளிமையையும் மனம் விட்டு பாராட்டுகிறார்கள்.
மணிக் சர்க்காருக்கு கம்பீரமான ஒரு ‘சல்வியுட்’ அடித்த கையோடு அவரவர் மாநிலத்து முதல்வர்களோடு ஒப்பிட்டு பார்த்துக் கொண்டால் ஒரு மாற்றத்துக்கான வழி பிறப்பதாக இருக்கும்.


Saturday, April 20, 2013

உடல் நலம்: 'இனி முகம் சிவக்க.. கண் கலங்க வேண்டாம்!'

உடல் நலத்துக்கு மிகவும் இன்றியமையாதது… உழைப்பும்.. உழைப்பைச் சார்ந்த பசி மற்றும் செரிமானமுமாகும். அவ்வகையில் நீங்கள் ‘ஓய்வறைக்கு’ (பன்னாட்டு தொழிலகங்கள் இந்தியாவில் படையெடுத்து வெற்றிவாகைச் சூடியபின் பயன்படுத்தும் மொழி இது) அதாவது ‘கழிவறைக்கு’ நாள்தோறும் இரண்டு முறை சென்று நிம்மதியுடன் திரும்புவரா? அதிஷ்டசாலிதான் போங்கள்! அல்லது ஓய்வறையில் நீண்ட நேரம் காலம் கழிப்பவராக இருந்தால்.. (நாளிதழ் வாசிப்பதற்காக அல்ல) நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகள் இவை:

நாள்தோறும் 8-10 டம்ளர்கள் குடிநீர் அருந்துவது குடல் இயக்கத்துக்கு நலம் பயக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். தாமிர செம்பில் இரவு முழுவதும் இருத்திய குடிநீரை காலையில் வெறும் வயிற்றுடன் குடிப்பதும் நல்லது.

வெது வெதுப்பான டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி நெய் கலந்து படுக்கைக்குப் போகும் முன்னர் அருந்துவது மலச்சிக்கல்  பிரச்னை தீர உதவும். அதேபோல, காலை நடை பயிற்சிக்கு முன்னர் 2-3 டம்ளர் வெது வெதுப்பான நீரை அருந்துவதும் சிறந்தது.



பழவகைகள் மற்றும் காய்கறிகள் அதிலும் குறிப்பாக பப்பாளி, கொய்யா போன்றவற்றை உணவாக்கிக் கொள்வதும் நல்லது. தக்காளி, பீட்ரூட் துண்டுகள் மலச்சிக்கல் நீக்க பெரிதும் உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது கொஞ்சம் விலை அதிகமான சமாச்சாரமாக இருந்தாலும், உடல் நலத்தை முன்னிட்டு ஒரு இயற்கை மருத்துவமாக ஏற்கலாம் அதாவது நாள்தோறும் காலையில் இரண்டு ஆப்பிள் பழங்களை நன்றாக கழுவி பல்லால் நேரடியாக கடித்து உண்பது மிகவும் நல்லது.

இதைவிட இன்னும் எளிய ‘கை – வைத்தியம்’, ஒரு டம்ளர் குடிநீரில் எலுமிச்சை சாறு கலந்து ஒரு சிட்டிகை அளவு உப்பு கலந்து குடிப்பது எப்பேர்பட்ட மலச்சிக்கலையும் நீக்கிவிடும் என்கிறார்கள் நம் கிராமத்து அனுபவ மருத்துவர்கள்.

இவை எல்லாமே இயற்கை சார்ந்த எளிய மருத்துவமுறைகள். ஆதலால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.

இனி நீண்ட நேரம் ‘ஓய்வறையில்’ தாமதிக்க வேண்டிய அவசியமும் இல்லை! முகம் சிவக்க … கண் கலங்கி கதவைத் திறந்து வர வேண்டிய சிக்கலும் இல்லை.

இனி எல்லாம் “ப்ரீதான் போங்கள்..!!”

Monday, April 15, 2013

முக்கிய செய்திகள்: ''வாசிப்பது மிஸ்டர் பாமரன்''

நன்றி: தினமணி மற்றும் தி  ஹிந்து நாளேடுகள் - 15.04.2013