NewsBlog

Sunday, November 10, 2013

நடப்புச் செய்தி: 'பூனைகளல்ல நாம்; புலிகள்!'


"இது என்ன லூஸீ தனமாயில்லே இருக்கு?" - என்றவாறு திருமதி வந்தார். 

அன்று உள்துறை அமைச்சகம் சற்று காட்டமாகவே இருந்ததை அந்த வருகை வெளிப்படுத்தியது.

" என்னம்மா?" - என்று நிமிர்ந்து பார்த்தேன்.

"இதோ! பேப்பர் படிங்க"

அவர் நீட்டிய கரங்களில் அன்றைய நாளேடு.

'காமன்வெல்த் மாநாடு: பிரதமர் புறக்கணிப்பு'

'வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான குர்ஷித் பங்கேற்கிறார்' 

- என்று கொட்டை எழுத்தில் முகப்பு செய்தி  வெளியாயிருந்தது.


"... வீட்டுத் தலைவர் போகாத இடத்தில் தனது குடும்பத்து உறுப்பினர் ஒருவரை அனுப்பி வைப்பது போலல்லவா இது இருக்கு! லூஸீ பசங்க!" - பிரஷ்ர் ஏற்றிக் கொண்டு பிள்ளைகள் அழுகுரல் கேட்டு அவர் சென்று விட்டார்.

உண்மைத்தான்! ஒவ்வொரு தமிழனும் இப்படிதான் உணர்வுபூர்வமாய் இருப்பார்; கோபத்தை வெளிப்படுத்துவார். காமன்வெல்த் மாநாடு சம்பந்தமாக தற்போது இந்திய அரசு எடுத்துள்ள நிலைபாடு ஒரு விதத்தில் முட்டாள்தனமானது என்றாலும் தவிர்க்கவும் இயலாதது. 

இலங்கை தமிழர்களின் அத்தனை துயரங்களுக்கும், படுபாதக இனவெறி செயல்களுக்கும்  முதல் குற்றவாளியாக நிற்பதே நாம் எனப்படும்போது வேறு எப்படிதான் முடிவெடுப்பது. 

தமிழர்களையும், தமிழர்களின் ஒரே பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் திராவிடக் கட்சிகளையும், மற்றும் திராவிட உதிரி கட்சிகளையும் அரசியலுக்கான சமாதானப்படுத்த வேண்டுமே! அதுதான் இந்த முடிவு.

வேறொரு நாட்டின் அந்நிய விவகாரங்களில் அத்துமீறி நுழைந்ததோடு அல்லாமல் அந்த நாட்டுக்கு நமது இராணுவத்தையும் அனுப்பி ஒரே நாடாக இருந்ததை 'பங்களாதேஷ்' என்று கூறு போட்டு தந்த நமக்கு இலங்கையை அதட்டி தமிழர்கள் நலன் காக்க முடியாதா?

அக்கறையில்லை! ஆம்! உண்மைதான் அக்கறையில்லை! இந்திய உபகண்டத்தில் தமிழகமும், தமிழரும் உண்டு என்று உணர்வுபூர்வ எண்ணம் மோலோங்கததாலேயே வந்த வினை இது. 

நாம் ஆரம்பத்தில் சோவியத் நடை நடந்தோம். இப்போது 'பெத்தண்ணா' அமெரிக்கா 'பேட்டை பிஸ்தா' நடை நடக்கிறோம்! அசலான நமது நடையை மறந்துவிட்டோம்! பூனைகளல்ல நாம் கோடுகளை சூடு போட்டுக் கொள்வதற்கு; அசலான இந்திய புலிகள்! நமது இறையாண்மையை நாம்தான் கட்டிக் காத்துக் கொள்ள வேண்டும்; இமயம் போன்ற உறுதியோடு!


இலங்கை தமிழர்களுக்கு எதிராக ஆயுதம் தந்து, எல்லாவிதமான ராஜதந்திர உதவிகளையும் செய்து, ஆசியாவின் மிக உயர்ந்த ராணுவ தொழில்நுட்பங்களையும் பகிர்ந்து, தமிழர்களை சர்சநாசம் செய்த ஆட்சி எந்திரம் காமன்வெல்த் மாநாடு விஷயத்தில் இதை விட மிகச் சிறந்த நடவடிக்கையை எப்படி எடுக்க முடியும்? என்பதை ஏனோ எனது வீட்டு உள்துறைக்கு புரியவில்லை.






0 comments:

Post a Comment