NewsBlog

Thursday, November 28, 2013

நடப்புச் செய்தி: 'இரண்டு சம்பவங்கள்.. இந்திய நீதிமன்றங்கள்!'



நாட்டை உலுக்கிய இரண்டு கொலை வழக்குகள். தொடர்ந்து வெளிவந்திருக்கும் தீர்ப்புகள். நமது நீதி பரிபாலனத்தின் வெளிப்பாடு மற்றும்  ஜனநாயக அமைப்பை கேள்விக் குறியாக்கியுள்ளன.

முதல் வழக்கு ஆருஷி கொலை வழக்கு. 

தில்லியில் 2008 ஆம் ஆண்டில் 14 வயது சிறுமி ஆருஷி கொல்லப்படுகிறார். போதிய சாட்சியங்கள் இல்லாததால் வழக்கை கைவிட சிபிஐ நீதிமன்றத்தில் அனுமதி கேட்க நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை. விசாரணைக் குழு மாற பெற்றோர் கைது செய்யப்பட்டு அவர்கள்தான் கொலைக்காரர்கள் என்று தற்போது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வயதில் மூத்த பணியாளுக்கும், அருஷிக்கும் தொடர்பு இருந்ததாகவும், அதை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர் கருணைக் கொலை செய்துவிட்டதாகவும் சிபிஐ கூறியது. இதற்கான துரும்பளவு ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை.

விசாரிக்கப்பட்ட 14 சாட்சிகளில் ஒருவர் கூட பெற்றோர் குறிப்பிட்ட சாட்சிகள் இல்லை. பிரேத பரிசோதனை அறிக்கை இல்லை. கைரேகை தடயங்கள், உண்மை கண்டறியும் சோதனை முடிவுகள் என்று எதுவும் இல்லாமல் தல்வார் தம்பதி சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்குரைஞர் ரெபக்கா கூறியபடி, "சிபிஐ தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஜோடித்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது!" - என்பது நிஜமானது.

கடைசியில், ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.



இரண்டாவது வழக்கு சங்கரராமன் கொலை வழக்கு.

சங்கரராமன் காஞ்சி கோயிலின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர். 2004 இல் இவர் கொல்லப்பட்டார். மடத்துக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் கொலை செய்யப்பட்டதாக வழக்கு.

மடாதிபதி ஜயேந்திரர், துணை மடாதிபதி விஜயேந்திரர் உட்பட 23 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்கை புதுவைக்கு மாற்றினர். 

இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 1,873 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 370 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். 712 ஆவணங்கள் இணைக்கப்பட்டன.  ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறினார். குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் கதிரவன் சென்றாண்டு சென்னையில் கொல்லப்பட்டார். 




370 சாட்சிகளில் 187 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது அப்ரூவர் ரவி சுப்பிரமணியம், சங்கரராமனின் மனைவி பத்மா, மகள் உமா மைத்ரேயி உட்பட 83 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்றது. நான்காண்டுகளில் 4 முறை நீதிபதிகள் மாறினர். 

இவ்வளவு ஆவணங்கள், சாட்சிகள் இருந்தும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

சட்டம் ஒரு இருட்டறை என்பது அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்ற கவலையின் வெளிப்பாடு என்பதைதான் புரிந்துகொள்ள முடிகிறது. அது குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ள என்பது மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது!

0 comments:

Post a Comment