NewsBlog

Monday, March 25, 2013

விருந்தினர் பக்கம்: 'குருஜி கோல்வாக்கரின் இதயக் குரல்!'



(ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் (சர் சங் சாலக்) குருஜி கோல்வாக்கர் பொது சிவில் சட்டம் பற்றி 26.08.1972 ‘ஆர்கனைசர்’ இதழுக்கு பேட்டி அளித்தார். முக்கியமான சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களையே தொகுத்து ‘சிறப்புத் தலையங்கமாக (Guest Editorial) சமரசம் மாதமிருமுறை 1-15 செப்.1995 இல், வெளியிட்டிருந்தது. அதை மிஸ்டர் பாமரன் வாசகர்களுக்காக அளிக்கிறோம்.

"தேசிய உணர்வுகளை வளர்க்க பொது சிவில் சட்டம் தேவையில்லை என்பதே என்னுடைய தீர்க்கமான கருத்தாகும். இந்தியா எப்போதுமே பன்முக தன்மைகள் கொண்ட நாடு. அப்படியிருந்தும் நாம் தொன்று தொட்டடே ஒன்றுபட்டவராக – வலுவானவராக திகழ்கிறோம். நாம் ஒன்றுபடுவதற்கு இணக்கம்தான் தேவைபடுகிறதே தவிர பொதுவான தன்மை அல்ல. அளவு கடந்த பொதுவான தன்மை இயற்கைக்கு உகந்ததல்ல என்றே நான் உணர்கிறேன்.

நம்முடைய அரசியல் சாசனத்தில் உள்ள வழிகாட்டிக் கொள்கை பொது சிவில் சட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் என்று கூறியிருப்பது உண்மைதான். ஒருவிஷயம் அரசியல் சாசனத்தில் இடம் பெற்று இருப்பதால் மட்டுமு; அது விரும்பத் தக்கதாக ஆகிவிட முடியாது. மேலும், அரசியல் சாசனம் இந்திய அனுபவத்தின் அடிப்படையில் நன்கு சிந்திக்கப்பட்டு இயற்றப்பட்ட சாசனம் அல்ல. மாறாக, பல அந்நிய கருத்தக்களின் தொகுப்பே நம் அரசியல் சாசனம்.

ஒரு வகுப்போ, சமுதாயமோ, இனமோ தனக்கு உரிய தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொள்வதில் தவறு ஏதும் இல்லை. அதனை நான் ஆட்சேபிக்கவும் இல்லை. ஆனால், அது தேசிய உணர்வுகளைப் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.

‘நான்கு பெண்களை மணம்  செய்து கொள்ள முஸ்லிம்களுக்கு உரிமை இருப்பதால், மக்கள்  தொகையில் அவர்களின் எண்ணிக்கை பெருகிவிடும். பொதுசிவில் சட்டம் மூலம் இந்த அபாயத்தை தடுக்க வேண்டும்!’- என்று சிலர் கூறுகிறார்கள். தேசிய உணர்வை வளர்ப்பதற்கான எதிர்மறை அணுகுமுறையாகும் இது.

தேச ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை உருவாக்கிட இந்து சட்டங்களை ஒரே வகையாக தொகுப்பது கூட தேவையற்ற ஒன்று என நான் நினைக்கிறேன். தொன்றுதொட்டு எண்ணற்ற சட்டத் தொகுப்புகளை (Codes) நாம் கொண்டிருந்தோம். அதனால் நாம் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை.

பர்தா, பலதார மணம் போன்ற முஸ்லிம் பழக்க வழக்கங்களை மனிதாபிமான அடிப்படையில் நீங்கள் ஆட்சேபித்தால்… அது சரியானதே! ஆனால், அனைவரையும் சமன் செய்ய வேண்டும் என்ற ‘ரோடு ரோலர்’ மனப்பான்மை முற்றிலும் தவறானது. முஸ்லிம்கள் அவர்களின் சட்டத்திட்டங்களை அவர்களே இயற்றட்டும். பலதார மணம் சரியில்லை என்று அவர்களே முடிவுக்கு வந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால், இந்தக் கருத்தை அவர்கள் மீது திணப்பதை நான் விரும்பவில்லை.

பொதுவான தன்மை தேசங்களுக்கு சாவுமணி அடிக்கும் என்பதே என் கருத்து. இயற்கை பொதுவான தன்மையை ஏற்றுக் கொள்வதில்லை. எனவே, பல்வேறு வாழ்க்கை முறைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் நான் நினைக்கின்றேன். ஆனால், இந்தப் பல்வேறு தன்மைகள் ஒன்றுக்கொன்று துணை போக வேண்டும்; தேசிய ஒற்றுமைக்கு வழிகோல வேண்டும். தேசிய ஒற்றுமைக்கு எதிரானதாக அமைந்திடக் கூடாது!"

 - நன்றி: சமரசம்

0 comments:

Post a Comment