Pages - Menu

Pages - Menu

Menu - Pages

Tuesday, February 4, 2014

இதழியல்:காமிராவில் கைவண்ணம் -5: 'ஃபிரேமுக்குள் சுவர்களா அடக்குவது?'



தெளிவில்லாத மங்கலான புகைப்படங்களுக்கு காமிராவின் மீது பழி போடக் கூடாது; படத்தைக் 'கிளிக்' செய்யும்போது, நம் கை நடுங்குவதுதன் விளைவாகவே படங்கள் 'ஷேக்' ஆகிவிடுகின்றன. கை நடுக்கம் முக்கியமான தவறுதான். 

ஆனால், அதேவேளையில், புதிதாகப் படம் எடுப்பவர்கள் மற்றொரு முக்கிய பிழை விட்டு விடுகிறார்கள். இது பொதுவாக 'புது முகங்கள்' எல்லோருமே செய்கின்ற பிழைதான். அது என்ன என்கிறீர்களா? தாங்கள் எடுக்கும் படங்களில் என்னென்னவெல்லாம் வரக்கூடாது என்று நினைக்கிறார்களோ அவற்றை எல்லாம் தற்செயலாகக் குறிப்பிட்ட ஃபிரேமுக்குள் வரச் செய்துவிடுவதுதான்.

அதை எப்படித் தவிர்ப்பது?

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 

ஒருமுறை ஒருவர் தனது மூன்று பிள்ளைகளையும் புகைப்படம் எடுத்து வந்து காட்டினார். நான் அந்தப் படத்தைப் பார்த்து அவரது திறமையைப் பாராட்ட வேண்டும் என்று அவர் எதிர்பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன்.

அந்தப் புகைப்படம் பாராட்டும்படி இல்லை. எனவே, "இப்போதெல்லாம் சுவர்களைக்கூட விட்டுவிடாமல் படம் எடுத்து விடுகிறோம் போலிருக்கிறதே!" - என நான் சொன்னதும் அவருக்கு என்னவோ மாதிரி ஆகிவிட்டது. 

ஆனால், நான் எதற்காக அப்படிச் சொன்னேன் என்று அவர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஆகவே, அவரிடம் அவர் எடுத்து வந்திருந்த படத்தைக் காட்டி, "இங்கே பாருங்கள் நீங்கள் எடுத்த படத்தில் முக்கால்வாசி இடத்தை ஒரு சுவர் அல்லவா ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஆவலுடன் எடுக்க விரும்பிய உங்கள் மூன்று பிள்ளைகளும் படத்தின் கீழ்ப்புறத்தில் எங்கோ இடது கோடியில் ரொம்பவும் சின்னதாகத்தானே தெரிகிறார்கள். போதாதற்கு, அந்தக் குழந்தைகளின் கணுக்கால்களுக்குக் கீழ் உள்ள பகுதி வேறு வெட்டுப்பட்டுப் போய் விட்டதைப் பாருங்கள்!" - என நான் சுட்டிக் காட்டிய பிறகுதான் அவருக்கு அது தவறு என்று புரிந்தது. 

ஏதோ சுவர்தான் மிகவும் முக்கியம் போலவும் அவரது குழந்தைகள் அத்தனை முக்கியம் அல்ல என்பது போலவும் அவர் அந்தப் புகைப்படத்தை எடுத்திருந்தார். அந்தப் படத்தை எப்படி எடுத்திருக்க வேண்டும் என்பதை விளக்கியதும்தான் அவர் புரிந்து கொண்டார்.



அதேபோல, மற்றொரு படத்தை ஒரு பெண் கொண்டு வந்து காட்டினார். நீண்ட பசும்புல்தரை. அதன் மூலையில் தெளிவில்லாமல் வெள்ளையில் தேமல் படர்ந்த மாதிரி ஏதோ ஒன்று. "என்னம்மா! ஏன் இவ்வளவு சிரமப்பட்டு பசும்புல் வெளியைப் படம் எடுத்திருக்கிறீர்கள்?" - என்று கேட்டேன். 

அந்தப் பெண் திடுக்கிட்டார். 

"பசும்புல் வெளியா? நான் என் அருமை நாய்க்குட்டியை அல்லவா படம் எடுத்தேன்!" - என அவர் அப்பாவித்தனமாய் கூறியதும் எனக்குச் சிரிப்பு வந்தது. 

"நீங்கள் உங்கள் நாய்க்குட்டியைப் படமெடுக்க விரும்பியது சரி. ஆனால், நீங்கள் பிரேமுக்குள் நாய்க்குட்டியே பிரதானமாக இருப்பதைப் போல அந்தப் படத்தை ஃபோகஸ் செய்து எடுத்திருந்தால் 'லான்' (Lawn - புல்வெளி) முக்கிய இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிராதே!" - எனக்கூறி அப்படத்தை எப்படி எடுத்திருக்க வேண்டும் என்பதைவிளக்கினேன்.

இந்த இரண்டு படங்களிலும் இருந்த குறை மிகச் சரியாகச் சொல்வதாக இருந்தால்... அந்தப் படங்களை எடுத்தவர்களின் தவறு, அவர்கள் படம் எடுப்பதன் முக்கியமான அடிப்படைஒன்றைக் கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் அதாவது படத்தின் ஃபிரேமுக்குள் அடக்கப்பட வேண்டிய அம்சங்கள் என்ன என்பதை அவர்கள் சரிவரத் தெரிந்திருக்கவில்லை.  

நீங்கள் எதனைப் படம் எடுக்க விரும்பிகின்றீர்களோ அதனை அதாவது உங்கள் வளர்ப்புப் பிராணியை, குழந்தைகளை, காரை முதலில் காமிரா 'வியூஃபைண்டரில்' பார்த்து அது அல்லது அவை ஃபிரேமுக்குள் தெளிவாகவும், முக்கியமாகவும் தனித்துத் தெரியும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மரம், செடி, கொடிகள், பூமி, ஆகாயம், சுவருக்கு முக்கியத்துவம் தர வேண்டாம். 

படம் எடுப்பவர்கள் கவனிக்க வேண்டிய இரண்டாவது முக்கிய அம்சம் இது.

- ஆரி மில்லர்
ஆரி மில்லர்





No comments:

Post a Comment