Pages - Menu

Pages - Menu

Menu - Pages

Monday, November 19, 2012

அதிகாரத்துக்கு எதிரான அறப்போர்

பதினான்காம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட மன்னர்களில் முக்கியமானவன் அலாவுத்தீன்  கில்ஜி. சர்வாதிகாரி. முன்கோபி. பிறர் ஆலோசனைகளை அலட்சியம் செய்பவன். அப்படிப்பட்டவனுக்கு ஷரீஅத் (திருக்குர்ஆன் - நபிபெருமானார் வழிமுறை) ஒளியில் சில பிரச்சினைகளுக்குத் தீர்வ காண வேண்டும் என்ற எண்ணம் ஏனோ எழுந்தது.

அன்றைய தலைசிறந்த இஸ்லாமியச் சட்ட வல்லுநராகத் திகழ்ந்தவர் நீதிபதி முகீஸீத்தீன். அவரை அரசவைக்கு அழைத்தான் கில்ஜி. அரசாட்சியில் யாருடைய ஆலோசனையையும் மதிக்காத சுல்தானுக்கு இப்போது என்ன தேவை வந்தது? என நீதிபதிக்கு ஆச்சரியம் உண்டானது.



தன் முடிவு நெருங்கிவிட்டதாக முகீஸீத்தீன் எண்ணினார். அதற்கு காரணமும் இல்லாமலில்லை. அவர் எந்நாளும் நீதிக்குப் புறம்பாக தீர்ப்பபை வளைத்ததில்லை. அடுத்தவர் முகஸ்துதிக்காகவோ, பயந்தோ அநீதிக்கு என்றும் துணை போனதில்லை. அரசனோ ஷரீஅத் - நீதிக்கு முற்றிலும் எதிரானவன். தன் பதில்களும் அவனுக்கு திருப்தியளிக்கவும் போவதில்லை. அவை இன்னும் கோபத்தை கிளறுபவையாகவே இருக்கும். இருப்பினும் என்ன செய்வது? உண்மையை உரைத்தலே நீதிபதிக்கு அழகு!

நடப்பது நடக்கட்டும் என்று முகீஸீத்தீன் கில்ஜியின் அரசவைக்கு சென்றார். 

நீதிபதியை சுல்தான் வரவேற்று இருக்கையில் அமரச் செய்தான். அவனது முதல் சந்தேகம் அரசு அதிகாரிகளின் லஞ்ச - ஊழல்களைப் பற்றியது.

"நீதிபதி அவர்களே! அரசு அதிகாரிகளின் லஞ்ச - லாவண்யங்களைத் தாள முடியவில்லை. எனவே, அவர்களுக்கு சற்று கடுமையான தண்டனை தர விரும்புகின்றேன். திருடுபவனுக்கு ஷரீஅத்தில் மணிக்கட்டை தரித்து விடுவதே தண்டனையல்லவா? அதனால்.. அரசு ஊழியர்களின் கைகளை ஷரீஅத் சட்டபடி வெட்டி தண்டனையளிக்கலாமா?"

"அரசே! அரசு அலுவலகத்திற்காக ஊதியம் பெற்றுக் கொண்டே மக்களிடம் லஞ்சம் பெறுவதும், அவர்களிடம் ஏதாவது பிரதிபலனை எதிர்ப்பார்த்து சம்பாதிப்பதும் குற்றம்தான். இப்படி தவறாக ஈட்டிய சொத்துக்களை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்து அரசு கரூவூலத்தில் (பைத்துல்மால்) சேர்க்க வேண்டும் என்பதே ஷரீஅத்தின் விதியாகும். மேற்படியான குற்றங்களுக்காக கையை தரிப்பது சட்ட விரோதமானதாகும். திருட்டுக் குற்றவாளிகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். அதற்கும் சில ஷரஅத்துக்கள் உண்டு. அவற்றையும்  மீறி திருட்டுக் குற்றமிழைப்பவருக்கே கடும் தண்டனை தரச்சொல்கிறது இஸ்லாம்"

சுல்தானின் கருத்துக்கு மாற்றமான தீர்ப்பையே நீதிபதி வழங்கினார்.

"சரி.. நான் என்னுடைய சொந்த செலவுகளுக்காக பைத்துல்மாலிலிருந்து (அரசு கரூவலத்திலிருந்து) எவ்வளவு பணம் எடுத்துச் செலவழிக்க முடியும்?" கில்ஜயின் இரண்டாவது சந்தேகம் இது.



தன் முடிவு நெருங்கிவிட்டதை இந்த கேள்வியிலிருந்தே முகீஸீத்தீன் தெரிந்து கொண்டார். என்னவானாலும் நீதியிலிருந்து அறவே பிறழக்கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டார். அச்சத்திற்கு சற்றும் அவர் இடம் தரவில்லை. மறுமைநாளில் இறைவன் முன்பு சத்தியத்தை மறைத்த குற்றத்திற்காக தலைகுனிந்து நிற்பதைவிட இம்மையில் சத்தியத்திற்கு சான்று பகர்ந்த செயலுக்காக தலையை இழப்பதே மேல் என்று உறுதி பூண்டார். 

"அரசே! நீங்கள் பைத்துல்மாலிலிருந்து பணத்தை எடுத்து கையாள தடையில்லை. ஆனால், அப்படி எடுப்பதற்கு மூன்று வழிமுறைகள் உள்ளன. முதல் நிபந்தனை நீங்கள் சாமான்யமானவர்களின் வாழ்க்கைத் தரத்துக்கு மாற வேண்டியிருக்கும். அப்போதுதான் உங்கள் வாழ்க்கைத் தேவைக்காக சராசரி நபர் குறைந்தளவு வருமானம் ஈட்டுவதைப் போலவே நீங்களும் அதற்கு மிகைக்காமல் பைத்துல்மாலிலிருந்து எடுத்து செலவழிக்கலாம். இதுவே இஸ்லாமிய ஆட்சியாளர்களின் வழிமுறையாகும். 

இரண்டாவது வழிமுறை, நீங்கள் உங்கள் குடிமக்களில் செல்வந்தர்களின் வாழ்க்கை வசதிகளைப் பெறுவது. அதற்கு எவ்வளவு தேவை உள்ளதோ அதை நீங்கள் பைத்துல்மாலிருந்து எடுத்த பயன்படுத்த முடியும். ஆனால், இது வீண் விரயம் என்ற பட்டியலில் இடம் பெறும். வீண் விரயம் செய்பவரை இறைவன் நேசிப்பதில்லை. 

கடைசியாக மூன்றாவது வழிமுறை, செல்வந்தர்களைவிடவும் சற்று கூடுதலான வாழ்க்கை வசதிகளைப் பெறுவது. ஆனால், இது உங்கள் பிரஜைகளையும் அவர்களின் செல்வங்களையும் கொள்ளையடிப்பதற்கு ஒப்பானதாகும்!"

முகீஸீத்தீனின் பதிலைக் கேட்டதும் அலாவுத்தீன்  கில்ஜி சர்ரென்று கோபத்தின் உச்சிக்கு சென்றான். கண்கள் சிவந்து விட்டன. இது ஷரீஅத் விவகாரமாக இருந்ததால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

தேவகிரிக்கு ஆளுநராக பதவி வகித்தப்போது சுல்தானுக்கு ஒரு புதையல் கிடைத்திருந்தது. அதை அவன் அடைய விரும்பி இருந்தான். அது குறித்து கடைசி வினாவை தொடுத்தான்.

அந்தப் புதையல் கிடைத்த போது, கில்ஜியின் படைவீரர்களும் சாட்சிகளாக கூட இருந்தனர். அதனால், அது தனிநபர் உடைமையல்ல. பொதுவானது. எனவே, புதையல் அரசுக்கு சொந்தமானது. அதை அரச கரூவூலத்தில் சேர்ப்பித்திட வேண்டும் என்று முகீஸீத்தீன் தீர்ப்பளித்தார்.

கில்ஜிக்கு கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. 

"என்ன? புதையல் எனக்குச் சொந்தமில்லையா? நான்தான் அதை கண்டெடுத்தேன். அது எனக்கே சொந்தம்..!" - என்று கூச்சல் போட ஆரம்பித்தான்.

அரசனின் கோபத்தைக் கண்ட நீதிபதி முகீஸீத்தீன் சற்றும் அஞ்சவில்லை. புன்னகைத்தவாறு இருக்கையிலிருந்து எழுந்து சென்றுவிட்டார். தனது கடமையைச் செய்த திருப்தி அவர் முகத்தில் நிலவியது.

வீட்டை அடைந்தவர் வீட்டாரிடம், நான் உங்களிடம் இறுதியாக விடை பெற்றுச் செல்ல வந்திருக்கின்றேன். இன்னும் சற்று நேரத்தில் அரசர் என்னை அரசவைக்கு அழைத்து சிரச்சேதம் செய்யப் போகின்றார்" -  என்றார். மரணத்தை எதிர்க்கொள்ள தயாராய் குளித்து உடலை தூய்மையாக்கிக் கொண்டார். இறைவனை தொழுதார். சிப்பாய்களின் வருகைக்காக காத்திருந்தார். 

சற்று நேரத்தில் அங்கு சிப்பாய்கள் வரவே செய்தனர். "அய்யா! அரசர் உங்களை கையோடு அழைத்து வரச் சொன்னார்!" -. என்று கூடவே அவரை அரசவைக்கு அழைத்தும் சென்றனர். 

முகீஸீத்தீன் அரசவைக்கு சென்ற போது கிலிஜியின் கோபம் தணிந்து விட்டிருந்தது. அஞ்சாமல் உண்மையை எடுத்துரைத்தமைக்கு வெகுவாகப் பாராட்டி பல பரிசுகளை வழங்கி நீதிபதியை மதிப்போடு வீட்டுக்கு அனுப்பி வைத்தான் அந்த சர்வாதிகாரி. 

இது இந்திய வரலாற்றில் இடம் பெற்ற ஒரு வரலாற்றுச் சம்பவம். 

ஆட்சியாளர் முன் அஞ்சாமல் சத்தியத்தை எடுத்துரைப்பது 'ஜிஹாத் எனப்படும் அறப்போருக்கு' சமமான செயலாகும்.

அன்று கொடிய ஆட்சியாளனுக்கு துதிப்பாடியாய் மாறாமல் ஒரு முகீஸீத்தீன் உண்மையை உரைத்தார். 

இன்று எங்கே போய்விட்டார் அவர்?

   

No comments:

Post a Comment